search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்வான இந்திய வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விடுவிப்பு
    X

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு தேர்வான இந்திய வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட்டில் இருந்து விடுவிப்பு

    • இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னைக்கு நாளை வருகை தர உள்ளனர்.

    அனந்தபுர்:

    இந்திய முன்னணி வீரர்கள் 4 அணியாக பிரிக்கப்பட்டு சிவப்பு நிற பந்தில் நடக்கும் முதல்தர கிரிக்கெட்டான துலீப் கோப்பை போட்டியில் விளையாடுகிறார்கள். இதன் 2-வது கட்ட ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபுரில் நாளை தொடங்குகிறது. முதலாவது லீக்கில் ஆடிய ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், சுப்மன் கில், ஆகாஷ் தீப், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரெல் ஆகியோர் வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதால், துலீப் கோப்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்குகிறது. இதற்கு தயாராகும் வகையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் சென்னைக்கு நாளை வருகை தர உள்ளனர்.

    சுப்மன் கில் இந்திய ஏ அணியின் கேப்டனாக இருந்தார். அவர் தேசிய அணிக்கு திரும்புவதால் மயங்க் அகர்வால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கில், ராகுல், ஜூரெல், குல்தீப், ஆகாஷ் தீப் ஆகியோருக்கு பதிலாக இந்திய ஏ அணிக்கு பிரதாம் சிங், அக்ஷய் வாட்கர், ஷாய்க் ரஷீத், ஷம்ஸ் முலானி, அகிப் கான் தேர்வாகியுள்ளனர்.

    அதே சமயம் 16 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள், பேட்ஸ்மேன் சர்ப்ராஸ் கான் ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் இருவர் மட்டும் துலீப் கோப்பை அணியிலும் தொடர்ந்து நீடிக்கிறார்கள். அதாவது அவர்கள் 2-வது சுற்றில் ஆட உள்ளனர். இதன் மூலம் அவர்கள் இருவரும் வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் களம் காணும் இந்திய அணியில் இடம் பெறமாட்டார்கள் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    இந்திய 'பி' அணியில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் இடத்துக்கு சுயாஷ் பிரபுதேசாய், 'அதிரடி மன்னன்' ரிங்கு சிங் அழைக்கப்பட்டுள்ளனர். டி அணியில் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக நிஷாந்த் சிந்துவும், ஏற்கனவே காயத்தால் விலகியுள்ள வேகப்பந்து வீச்சாளர் துஷர் தேஷ்பாண்டேவுக்கு பதிலாக வித்வாத் கவிரப்பாவும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய 'சி' அணியில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.

    Next Story
    ×