search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐ.பி.எல். ஏலத்தில் கே.எல்.ராகுலை மீண்டும் எடுக்க லக்னோ அணி திட்டம்? பயிற்சியாளர் தகவல்
    X

    ஐ.பி.எல். ஏலத்தில் கே.எல்.ராகுலை மீண்டும் எடுக்க லக்னோ அணி திட்டம்? பயிற்சியாளர் தகவல்

    • கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது.
    • அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர், ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

    புதுடெல்லி:

    2025-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு அணிகளும் மெகா ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்படும் வீரர்கள் விவரத்தை வெளியிட்டு இருந்தன.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ. 21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ. 11 கோடி), மோஷின்கான் (ரூ. 4 கோடி), பதோனி (ரூ.4 கோடி) ஆகிய 5 வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர்.

    அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். கடந்த சீசனில் ஐதராபாத் அணியுடனான ஆட்டத்தில் லக்னோ அணி படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டிக்கு பிறகு அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலிடம் மைதானத்தில் விரக்தியை வெளிப்படுத்தி இருந்தார்.

    அப்போது இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளானது. அதோடு 2025 சீசனில் லக்னோ அணிக்காக ராகுல் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. 'ராகுல் லக்னோ அணியின் அங்கம்' என்று கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சீவ் கோயங்கா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஏலத்தின் போது கே.எல். ராகுலை மீண்டும் எடுக்க லக்னோ அணி திட்டமிட்டுள்ளதாக அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நிக்கோலஸ் பூரன் உலகின் சிறந்த அதிரடி வீரர்களில் ஒருவர் ஆவார். அவரை விடுவித்து ஏலத்தில் எடுப்பதற்காக காத்திருக்க முடியாது. எங்களிடம் ஐ.பி.எல். ஏலத்தில் ஒரு வீரரை எடுப்பதற்கு உரிமையாளரை ஆர்.டி.எம். கார்டு இருக்கிறது.

    மேலும் முடிந்த வரை எங்கள் அணியில் விளையாடிய வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுப்போம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். சாத்தியமான அனைத்து அம்சங்கள் குறித்து நானும், அணி உரிமையாளரும் மீண்டும், மீண்டும் ஆலோசித்து வருகிறோம். வீரர்கள் தக்க வைப்பு குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.

    இவ்வாறு லாங்கர் கூறியுள்ளார்.

    லக்னோ அணி நிர்வாகம் தக்கவைப்பு மூலம் ரூ.51 கோடியை செலவழித்துள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் செலவிட அந்த அணியின் கைவசம் ரூ.69 கோடி இருக்கிறது.

    லக்னோ அணி 2024 சீசனில் 7-வது இடத்தை பிடித்தது. ராகுல் தான் அந்த அணியில் அதிகபட்சமாக 520 ரன் குவித்தார். அவரது ஸ்டிரைக்ரேட் 136 ஆக இருந்தது. முதல் வீரராக தக்க வைக்கப்பட்ட நிக்கோலஸ் பூரன் 499 ரன் எடுத்தார். ஆனால் அவரது ஸ்டிரைக் ரேட் 178 என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×