search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: கோலி பொறுமையாக விளையாடுவது அவசியம்- ரவி சாஸ்திரி
    X

    ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்: கோலி பொறுமையாக விளையாடுவது அவசியம்- ரவி சாஸ்திரி

    • கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம்.
    • ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.

    சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா சொந்த மண்ணில் இழந்தது. இதனால் இந்திய அணி நெருக்கடியில் உள்ளது. இத்தொடரில் விராட் கோலியின் பேட்டிங்கும் சிறப்பாக இல்லை.

    இந்த நிலையில் கோலிக்கு முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுரை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கோலி தனது கோட்டையான ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் திரும்பியுள்ளார். கிங் எனும் பட்டத்தை நீங்கள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடி எதிரணியிடம் பெற்றுள்ளீர்கள். எனவே கோலி பேட்டிங் செய்ய செல்லும் போது அது எதிரணியின் மனதில் இருக்கும்.

    இந்த தொடரின் முதல் 3 இன்னிங்சில் முதல் ஒரு மணி நேரம் கோலி அமைதியுடனும், கவனத்துடனும் விளையாடுவது மிகவும் முக்கியம். அந்த நேரங்களில் நீங்கள் வேகமாக இல்லாமல் பொறுமையுடன் நிதானமாக உங்களுடைய சொந்த வேகத்தில் விளையாடினால் அனைத்தும் சரியாகி விடும். ஆஸ்திரேலிய தொடரில் கோலி தனது பார்மை மீண்டும் பெறுவார் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் இந்திய அணி முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறும் போது, ரோகித் சர்மாவின் இயல்பான தாக்குதல் பாணி, சக்திவாய்ந்ததாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக மிட்செல் ஸ்டார்க்கிற்கு எதிராக அவருக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.

    போட்டியின் முதல் சில ஓவர்களில் ரோகித் சர்மாவின் கால் அசைவதில்லை. அதனால் அவர் சிக்கலில் சிக்குகிறார். அவர் ஷாட் தேர்வை சரியாக எடுக்க வேண்டும். இது ரோகித் சர்மாவுக்கு மட்டுமல்ல, எந்த ஒரு பேட்ஸ்மேன்களுக்கும் பொருந்தும்.

    ரோகித் சர்மா தனது இன்னிங்சின் தொடக்கத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். இதன் மூலம் அவரால் இந்தியாவுக்குத் தேவையான ரன்களை எடுக்க முடியும் என்றார்.

    Next Story
    ×