என் மலர்
கிரிக்கெட் (Cricket)
தன் மீதான கைது வாரண்ட் குறித்து மனம் திறந்த ராபின் உத்தப்பா
- ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
- கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் இயக்குநராக நியமிக்கப்பட்டேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தவர் ராபின் உத்தப்பா. தற்போது கிரிக்கெட் மட்டுமின்றி தொலைக்காட்சி தொகுப்பாளர், வர்ணனையாளர் போன்ற துறைகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், ராபின் உத்தப்பாவுக்கு எதிரான வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) மோசடி புகாரைத் தொடர்ந்து ராபின் உத்தப்பாவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. தன் மீதான கைது வாரண்ட் குறித்து ராபின் உத்தப்பா விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "எனக்கு எதிரான பி.எஃப். வழக்கு தொடர்பான சமீபத்திய செய்திகளைத் தொடர்ந்து, ஸ்ட்ராபெரி லென்செரியா பிரைவேட் லிமிடெட், சென்டௌரஸ் லைஃப்ஸ்டைல் பிரான்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட் மற்றும் பெர்ரிஸ் ஃபேஷன் ஹவுஸ் உடனான எனது தொடர்பு குறித்து சில விளக்கங்களை வழங்க விரும்புகிறேன்.
2018-19 ஆம் ஆண்டில், நான் இந்த நிறுவனங்களுக்கு கடன்கள் வடிவில் நிதி அளித்ததால் நான் இயக்குநராக நியமிக்கப்பட்டேன். இருப்பினும், நான் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது அந்நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளிலோ ஈடுபடவில்லை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், டிவி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் என்ற வகையில், அந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் பங்கேற்க எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை. உண்மையில், இன்றுவரை நான் நிதியளித்த வேறு எந்த நிறுவனங்களிலும் நான் நிர்வாகப் பொறுப்பிலும் இல்லை.
வருந்தத்தக்க வகையில், இந்த நிறுவனங்கள் நான் கடனாகக் கொடுத்த நிதியைத் திருப்பிச் செலுத்தத் தவறிவிட்டதால், சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு என்னை இட்டுச் சென்றது. நானும் பல வருடங்களுக்கு முன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.
வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நிலுவைத் தொகையை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியபோது, எனது சட்டக் குழு பதிலளித்தது. இந்த நிறுவனங்களில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது மற்றும் எனது ஈடுபாடு இல்லாததை உறுதிப்படுத்தும் ஆவணங்களை நிறுவனங்களிடமிருந்து வழங்கியது.
இருந்த போதிலும், வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் நடவடிக்கைகளை தொடர்ந்துள்ளனர். மேலும் எனது சட்ட ஆலோசகர்கள் வரும் நாட்களில் இந்த பிரச்சினையை தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள். முழுமையான உண்மைகளை தயவுசெய்து முன்வைக்கவும், பகிரப்படும் தகவல்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும் ஊடகங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.