என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
டர்பன் மைதானத்தின் ராசி இந்தியாவுக்கு கைகொடுக்குமா? முதல் டி20-யில் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்
- மைதானத்தை பொறுத்தவரை டர்பன் இந்தியாவுக்கு ராசியானது.
- இங்கு ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி கண்டுள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இந்த கிரிக்கெட் தொடர் ஏற்கனவே திட்டமிட்டது அல்ல. சமீபத்தில் இவ்விரு நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பேச்சுவார்த்தை நடத்தி இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளன. டர்பன் (நவ.8), கெபேஹா (நவ.10), செஞ்சூரியன் (நவ.13), ஜோகன்னஸ்பர்க் (நவ.15) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
இதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
உலகக் கோப்பையையும் சேர்த்து கடைசி ஐந்து 20 ஓவர் தொடர்களில் கோப்பையை வென்றுள்ள இந்திய அணி அந்த ஆதிக்கத்தை நீட்டிக்க முனைப்பு காட்டுகிறது. சமீபத்தில் சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்த போதிலும், அந்த தொடரில் ஆடிய வீரர்கள் யாரும் 20 ஓவர் போட்டிக்கு வரவில்லை. அதனால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்காது. கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப்சிங் போன்ற அனுபவ வீரர்கள் அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.
அதிரடி இடக்கை பேட்ஸ்மேன் அபிஷேக் ஷர்மா கடந்த ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் 47 பந்தில் சதம் விளாசினார். அதன் பிறகு ஆடிய தனது கடைசி 6 சர்வதேச இன்னிங்சில் 20 ரன்னை கூட தொடவில்லை. மீண்டும் பார்முக்கு திரும்ப இந்த தொடரை அவர் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பார். அவரும், சஞ்சு சாம்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள். மிடில் வரிசையில் சூர்யகுமார், ஹர்திக் பாண்ட்யா, திலக் வர்மா, ரிங்கு சிங் வலு சேர்க்கிறார்கள். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான், அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி கட்டுக்கோப்பாக பந்து வீசினால் தொடரை வெற்றியோடு தொடங்கலாம்.
எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா உள்நாட்டில் வலுவானது. ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீஜா ஹென்ரிக்ஸ் போன்ற அதிரடி சூரர்கள் இருக்கிறார்கள். கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் 7 ரன் வித்தியாசத்தில் அடைந்த தோல்விக்கு பழிதீர்ப்பதை எதிர்நோக்கி இருப்பார்கள். அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் பதிவு செய்துள்ள வீரர்கள் இந்த தொடரில் அசத்தினால் அவர்களது 'மதிப்பு' ஏலத்தில் எகிற வாய்ப்பு உண்டு. அந்த வகையிலும் வீரர்களுக்கு இந்த போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 27 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15-ல் இந்தியாவும், 11-ல் தென்ஆப்பரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
மைதானத்தை பொறுத்தவரை டர்பன் இந்தியாவுக்கு ராசியானது. இங்கு ஆடியுள்ள 4 ஆட்டங்களிலும் (பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) இந்தியா வெற்றி கண்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி கடந்த ஆண்டு இங்கு நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2007-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக கென்யா 73 ரன்னில் சுருண்டது குறைந்தபட்சமாகும். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில், இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ்சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர் நொறுக்கியது இந்த மைதானத்தின் தனிச்சிறப்பாகும்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்கு சிங், ரமன்தீப்சிங், அக்ஷர் பட்டேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப்சிங், ஆவேஷ்கான்.
தென்ஆப்பிரிக்கா: ரீஜா ஹென்ரிக்ஸ், ரியான் ரிக்கெல்டன், மார்க்ரம் (கேப்டன்), டேவிட் மில்லர், ஹென்ரிச் கிளாசென், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், மார்கோ யான்சென் அல்லது ஜெரால்டு கோட்ஜீ, கேஷவ் மகராஜ், ஒட்னில் பார்ட்மன், பேட்ரிக் குருகர், அன்டில் சிம்லேன் அல்லது இன்கபா பீட்டர்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.
இந்த ஆட்டத்தின் போது மழை குறுக்கிடலாம். அங்கு இன்று மழை பெய்வதற்கு 40 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்