என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ரஞ்சி டிராபி: மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விதர்பா

- மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் விதர்பா அணி வீழ்த்தியது.
- ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.
ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒரு அரையிறுதிப் போட்டியில் மும்பை- விதர்பா அணிகளும் கேரளா- குஜராத் அணிகளும் மோதினர்.
மும்பை விதர்பா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த விதர்பா அணி முதல் இன்னிங்சில் 383 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 270 ரன்கள் குவித்தது.
இதனால் விதர்பா 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. யாஷ் ரத்தோட்டின் சதத்தின் மூலம் (151) விதர்பா அணி 292 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணிக்கு 408 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடினமான இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 124 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சர்துல் தாகூர் - ஷம்ஸ் முலானி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷர்துல் தாகூர் அரை சதம் கடந்தார். 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடி எதிர்பாரதவிதமாக ரன் அவுட் ஆனது. ஷம்ஸ் 46 ரன்களில் வெளியேறினார். அதனை தொடர்ந்து ஷர்துல் 66 ரன்கள் என்ற நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்கள் மோஹித் அவஸ்தி- ராய்ஸ்டன் டயஸ் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். ஆனாலும் அவஸ்தி 34 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் விதர்பா அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் விதர்பா- கேரளா அணிகள் வருகிற 26-ந் தேதி மோதுகின்றனர்.