என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவுக்கு மாற்றப்படுகிறதா? - ஜெய் ஷா விளக்கம்
- மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது.
- வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
ஐசிசி நடத்தும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. தற்போதைய திட்டப்படி இந்த தொடரை வங்கதேசம் நடத்த இருக்கிறது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கும் வங்கதேசம் நாட்டில் தற்போது உள்நாட்டு கலவரம் வெடித்துள்ளது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றி, அந்நாட்டு தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் மற்றும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் திட்டமிட்டப்படி வங்கதேசத்தில் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், வன்முறை சூழ்ந்த வங்கதேசத்தில் கள நிலவரத்தை ஐசிசி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை வங்காளதேசத்தில் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறாத பட்சத்தில், இதனை இந்தியா நடத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில், வங்கதேசத்தில் நிலவி வரும் உள்நாட்டு பிரச்னை காரணமாக அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த முடியுமா என ஐசிசி பிசிசிஐயிடம் கேட்டுள்ளது.
ஆனால், அக்டோபர் மாதம் மழைக்காலம் தொடங்கிவிடும் என்பதாலும், இந்தியாவில் அடுத்தாண்டு மகளிர் ODI உலக கோப்பை நடக்கவுள்ளதாலும் ஐசிசியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
ஆதலால் மகளிர் டி20 உலகக் கோப்பை நடைபெறும் இடம் குறித்து விரைவில் ஐசிசி முடிவெடுக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.