என் மலர்
கால்பந்து
பிரீமியர் லீக் கால்பந்து: டிராவில் முடிந்த லிவர்பூல், மான்செஸ்டர் சிட்டி போட்டிகள்
- லிவர்பூல் அணிக்கெதிராக நாட்டிங்காம் பாரஸ்ட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தது.
- 66-வது நிமிடத்தில் டியாகோ ஜோட்டா கோல் அடித்து அணி டிரா செய்ய உதவி புரிந்தார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் 2024-2025 சீசனுக்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்ற போட்டி ஒன்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் லிவர்பூல், நாட்டிங்காம் பாரஸ்ட் (Nottm Forest) அணியுடன் மோதின. இதில் லிவர்பூல் அணி எளிதாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நாட்டிங்காம் பாரஸ்ட் அணியின் கிறிஸ் வுட் 8-வது நிமிடத்தில் கோல் அடித்து லிவர்பூல் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் முதல்பாதி நேர ஆட்டம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
பின்னர் 2-வது பாதிநேர ஆட்டம் தோடங்கியது. ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் லிவர்பூல் அணியின் டியாகோ ஜோட்டா கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது. அதன்பின் இரண்டு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.
போட்டி டிராவில் முடிந்தாலும் லிவர்பூல் 20 போட்டிகளில் 14-ல் வெற்றி பெற்று 47 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. நாட்டிங்காம் பாரஸ்ட் இந்த டிரா மூலம் 21 போட்டிகளில் 12 வெற்றி, 5 டிரா, 4 தோல்விகளுடன் 41 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது.
ஆர்சனல் 20 போட்டிகளில் 11-ல் வெற்றி, 7-ல் டிரா, 2-ல் தோல்வி என 40 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.
மான்செஸ்டர் சிட்டி
மற்றொரு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி ப்ரென்ட்போர்டு அணியை எதிர்கொண்டது. முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் மான்செஸ்டர் அணியின் பில் ஃபோடன் 66 மற்றும் 78-வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.
இதனால் மான்செஸ்டர் சிட்டி வெற்றிபெறும் நிலையில் இருந்தது. ஆனால் கடைசி 10 நிமிடத்தில் ப்ரென்ட்போர்டு அணி அபாரமாக விளையாடியது. அந்த அணியின் விஸ்டா 82-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் காயத்திற்கான நேரத்தில் (90+2) கிறிஸ்டியன் நோர்கார்டு கோல் அடிக்க போட்டி டிராவில் முடிந்தது.
இந்த டிரா மூலம் மான்செஸ்டர் சிட்டி 21 போட்டிகள் முடிவில் 10 வெற்றி, 5 டிரா மூலம் 35 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்த பிடித்துள்ளார். வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்திற்கு முன்னேறியிருக்கும்.