என் மலர்
விளையாட்டு
மேக்னஸ் கார்ல்சன் விமர்சனத்துக்கு 'உலக செஸ் சாம்பியன்' குகேஷ் நச் பதில்
- 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
- உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் செஸ் திறமைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை.
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்தது. இந்தப் போட்டி 14 சுற்று கொண்டது.
நேற்று முன்தினம் 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ் கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. 58-வது நகர்த்தலில் டிங் லிரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்று உலக சாம்பியன் ஆனார். இதன்மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார்.
இந்நிலையில், உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து பேசிய முன்னாள் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன், "இது 2 உலக சாம்பியன்ஷிப் போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி போல இல்லை" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து கார்ல்சனின் விமர்சனம் குறித்து பேசிய குகேஷ், " சில போட்டிகளின் தரம் சிறப்பாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் செஸ் திறமைகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. யாருக்கு சிறந்த குணம், மன உறுதி உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. அந்த குணங்களை நான் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தினேன் என்று நினைக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.