search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: புதிய கோல் கீப்பருடன் இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு
    X

    ஓய்வு பெற்ற கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் உடன் புதிய கோல் கீப்பர் கிரிஷன் பகதூர்

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: புதிய கோல் கீப்பருடன் இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

    • பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றார்.
    • அவருக்கு பதிலாக புதிய கோல் கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    8-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சீனாவில் உள்ள ஹூலன்பியர் நகரில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

    இந்த போட்டி தொடரில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் செப்.8-ந்தேதி சீனாவுடன் மோதுகிறது. 9-ந்தேதி ஜப்பானுடனும், 11-ந் தேதி மலேசியாவுடனும், 12-ந்தேதி தென்கொரியாவுடனும், 14-ந்தேதி பரம எதிரி பாகிஸ்தானுடனும் மோதுகிறது.

    இந்த போட்டிக்கான 18 பேர் கொண்ட இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாக தொடருகிறார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியுடன் மூத்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் ஓய்வு பெற்றதை அடுத்து எதிர்பார்த்தபடியே பிரதான கோல்கீப்பராக கிரிஷன் பகதூர் பதாக் இடம் பிடித்துள்ளார். மாற்று கோல் கீப்பராக சுரஜ் கர்கெரா அங்கம் வகிக்கிறார்.

    நடுகள வீரர் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடிய ஹர்திக் சிங், மன்தீப் சிங், லலித் உபாத்யாய், ஷம்ஷெர்சிங், குர்ஜந்த் சிங் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் அணியில் இடம் பெற்றிருந்த 10 வீரர்கள் நீடிக்கின்றனர்.

    ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதாக், சுரஜ் கர்கெரா, பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித், நடுகளம்: ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, விவேக் சாகர் பிரசாத் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், முகமது, ரஹீல் முசீன், முன்களம்: அபிஷேக், சுக்ஜீத் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், உத்தம் சிங், குர்ஜோத் சிங்.

    Next Story
    ×