என் மலர்
விளையாட்டு
இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்- சிந்து சாதிப்பாரா?
- சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார்.
- திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும்.
புதுடெல்லி:
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. மொத்தம் ரூ.8¼ கோடி பரிசுத் தொகைக்கான இந்த போட்டியில் இந்தியா சார்பில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 44 வீரர், வீராங்கனைகள் களம் இறக்கப்படுகிறார்கள்.
இதில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றில் ஷூவ் யன் ஜங்கை (சீனதைபே) சந்திக்கிறார். முன்னதாக சிந்து சக நாட்டவரான அனுபமா உபத்யாயாவுடன் மோதும் வகையில் அட்டவணை அமைந்திருந்தது. ஆனால் கடைசிகட்ட மாற்றங்களால் சிந்துவின் எதிராளியும் மாறி விட்டார்.
சிந்து கடந்த மாதம் தொழிலதிபர் வெங்கட தத்தா சாயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் கால்பதிக்கும் முதல் போட்டி இதுவாகும். கடந்த ஆண்டில் பெரும்பாலான போட்டிகளில் தோல்வியை தழுவிய சிந்து உள்ளூர் சூழலில் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் ஒலிம்பிக் சாம்பியன் அன்சே யங் (தென்கொரியா), 2-ம் நிலை வீராங்கனை வாங் ஷியி (சீனா), முன்னாள் உலக சாம்பியன் நஜோமி ஒகுஹரா (ஜப்பான்) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகளும் வரிந்து கட்டுவதால் சிந்துவுக்கு கடும் சவால் காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. மற்ற இந்திய வீராங்கனைகள் ஆகர்ஷி காஷ்யப், மாள்விகா பன்சோத், அனுபமா உபத்யாயா ஆகியோரை பொறுத்தவரை ஓரிரு சுற்றை தாண்டினாலே பெரிய விஷயமாக இருக்கும்.
29 வயதான சிந்து நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'திருமணத்திற்கு பிறகு எனது முதல் போட்டி இதுவாகும். அத்துடன் புத்தாண்டிலும் முதல் தொடராகும். எனவே எல்லாமே புதுசு. உள்ளூர் ரசிகர்கள் முன் எனது மிகச்சிறந்த திறனை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
பாரீஸ் ஒலிம்பிக்குக்கு பிறகு உடல் அளவிலும், மனதளவிலும் வலுவாக மீண்டு வருவதற்கு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. கடந்த ஆண்டின் கடைசி பகுதியில் கிடைத்த இடைவெளி புத்துணர்ச்சியுடன் மீண்டு வருவதற்கு உதவியது. என்னால் இன்னும் நிறைய சாதிக்க முடியும் என்று நினைக்கிறேன். அந்த வெறி எனக்குள் இருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்), 3-ம் நிலை வீரர் ஜோனதன் கிறிஸ்டி (இந்தோனேசியா), உலக சாம்பியன் குன்லாவுத் விதித்சரண் (தாய்லாந்து), இந்தியாவின் லக்ஷயா சென், பிரனாய் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். கடைசி நேரத்தில் 'நம்பர் ஒன்' வீரர் ஷி யுகி (சீனா), ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றவரான அந்தோணி கின்டிங் (இந்தோனேசியா) ஆகியோர் விலகியதால் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், கிரண்ஜார்ஜ் ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
2022-ம் ஆண்டு சாம்பியனான லக்ஷயா சென் முதல் சுற்றில் சீனதைபேயின் லின் சுன் யியை எதிர்கொள்கிறார். பிரனாய் முதல் ரவுண்டில் சு லீ யாங்குடன் (சீனதைபே) மல்லுக்கட்டுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத், ஜப்பானின் கோடாய் நராவ்காவுடன் மோதுகிறார்.
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி ஜோடி முதல் சுற்றில் மலேசியாவின் மான்வெய் சோங்- டீ காய் வுன் இணையை சந்திக்கிறது. பெண்கள் இரட்டையரில் திரிஷா ஜாலி- காயத்ரி கோபிசந்த் இணை தங்களது சவாலை ஜப்பானின் அலிசா இகராஷி- அயகோ சுகுரமோட்டோ ஆகியோருடன் தொடங்குகிறார்கள்.
சாத்விக்- சிராக் ஷெட்டி கூறுகையில, 'கடந்த ஆண்டு மலேசிய ஓபனில் இறுதி சுற்றில் விளையாடி விட்டு இங்கு (இந்திய ஓபன்) வந்தோம். இங்கும் இறுதிசுற்றை எட்டினோம். இந்த சீசனில் மலேசிய ஓபனில் அரைஇறுதி வரை முன்னேறி விட்டு வந்துள்ளோம். ஆனால் கடந்த ஆண்டின் முடிவை விட மேலும் முன்னேற்றம் காண விரும்புகிறோம்' என்றனர்.
ஒற்றையரில் கோப்பையை வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.58 லட்சமும், இரட்டையர் பிரிவில் வாகை சூடும் ஜோடிக்கு ரூ.61 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்படும். இன்று காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம்.