என் மலர்
விளையாட்டு

வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்பில் ராஜஸ்தான்: டெல்லி அணியுடன் இன்று மோதல்
- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வி என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி வீறுநடை போட்ட டெல்லி அணி, சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்தது.
மும்பைக்கு எதிராக 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் டெல்லி அணி ஒரு கட்டத்தில் (11.3 ஓவரில்) 2 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு வேகமாக விக்கெட்டுகளை இழந்து 193 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆகி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரர் பிராசர் மெக்குர்க் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக பிளிஸ்சிஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், முகேஷ் குமார் கைகொடுக்கிறார்கள்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), 4 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் தோல்வி, அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி, அதற்கு அடுத்த 2 ஆட்டங்களில் தோல்வி என்று நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், நிதிஷ் ராணா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆனால் ஒரு சேர 'கிளிக்' ஆகாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் வலுசேர்க்கின்றனர்.
மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15-ல் ராஜஸ்தானும், 14-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.






