search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கணவரை பிரிவதை கவிதையில் உணர்த்துகிறாரா சானியா?
    X

    கணவரை பிரிவதை கவிதையில் உணர்த்துகிறாரா சானியா?

    • இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
    • 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்

    மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).

    குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.

    தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.

    2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.


    ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

    2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.

    இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    திருமணம் கடினமானது.

    விவாகரத்து கடினமானது.

    உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.

    கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×