search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    தங்கப்பதக்கம் இந்திய மக்களுக்கானது- நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி
    X

    தங்கப்பதக்கம் இந்திய மக்களுக்கானது- நீரஜ் சோப்ரா நெகிழ்ச்சி

    • நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
    • பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    புடாபெஸ்ட்:

    19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அங்கேரி தலைநகர் புடா பெஸ்டில் கடந்த கடந்த 19-ந்தேதி தொடங்கியது. நேற்று கடைசி நாள் போட்டிகள் நடைபெற்றது.

    9 தினங்கள் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 200 நாடுகளில் இருந்து 2 ஆயிரத்து மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் 28 பேர் (23 வீரர்கள், 5 வீராங்கனைகள்) 15 பிரிவில் பங்கேற்றனர்.

    ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.45 மணிக்கு தொடங்கியது. நீரஜ் சோப்ரா, டி.பி.மானு, கிஷோர் குமார் ஜெனா ஆகிய 3 இந்திய வீரர்கள் தகுதி பெற்றனர். 12 பேர் இதில் பங்கேற்றனர்.

    அனைவரும் எதிர்பார்த்தப்படி நீரஜ் சோப்ரா தங்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் 88.17 மீட்டர் தூரம் எறிந்தார். அவர் தனது 2-வது வாய்ப்பில் இதை எறிந்து முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றார்.

    25 வயதான நீரஜ் சோப்ராவின் முதல் வாய்ப்பு பவுலாக அமைந்தது. 3-வது வாய்ப்பில் 86.32 மீட்டரும், அதைத்தொடர்ந்து 84.64 மீட்டரும், 87.73 மீட்டரும், 83.98 மீட்டரும் எறிந்தார்.

    பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நதீம் 87.82 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி பதக்கமும், செக்குடியரசுவை சேர்ந்த ஜாகுப் வேட்லெஜ் 86.67 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    உலக தடகள போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் நீரஜ்சோப்ரா புதிய வரலாறு படைத்தார்.

    40 ஆண்டுகால வரலாற்றில் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை தங்கப்பதக்கம் பெற்றது இல்லை. நீரஜ் சோப்ரா தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

    கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரேகானில் நடந்த உலக தடகள போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் பெற்றார். தற்போது அதில் இருந்து முன்னேறி புதிய முத்திரை பதித்தார்.

    நீரஜ்சோப்ரா ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்து இருந்தார்.

    உலக தடகள போட்டியில் இந்தியா இதுவரை 3 பதக்கத்தை பெற்றுள்ளது. 2003-ம் ஆண்டு பாரீசில் நடந்த போட்டியில் நீளம் தாண்டுதலில் அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார்.

    தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தால் நீரஜ் சோப்ரா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த பதக்கம் இந்திய மக்களுக்கானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக நீரஜ்சோப்ரா கூறியதாவது:-

    நள்ளிரவு வரை தூங்காமல் எனது போட்டியை ஆவலுடன் பார்த்த இந்திய மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த தங்கப் பதக்கம் இந்திய மக்களுக்கானது.

    நான் ஒலிம்பிக் சாம்பியன். தற்போது உலக சாம்பியன். தொடர்ந்து பல்வேறு துறைகளில் கடினமாக உழைக்க வேண்டும். உலகில் பெயர் எடுக்க வேண்டும்.

    போட்டிக்கு முன்பு நான் எனது செல்போனை அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் 'நேற்று நான் பார்த்தேன். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போட்டி என்று தான் முதலில் பார்த்தேன். ஆனால் ஐரோப்பிய வீரர்கள் ஆபத்தானவர்கள். எந்த நேரத்திலும் அவர்கள் மிகப்பெரிய அளவில் ஈட்டி எறிதலை செய்ய முடியும்.அர்ஷத், ஜாகுப் மற்றும் ஜூலியன் வெப்பர் உள்ளனர். எனவே கடைசி எறிதல் வரை நீங்கள் மற்ற வீரர்கள் எறிவதை பற்றி யோசித்து இருக்க வேண்டும்.

    ஆனால் வீசயம் என்னவென்றால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான ஒப்பீடுகள் இருக்கும்.

    ஈட்டி எறிதலில் ஐரோப்பிய நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தும். தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும் நல்ல நிலைக்கு வந்துள்ளன.

    பாகிஸ்தான் வீரர் அர்ஷாத் நன்றாக வீசியதை உணர்ந்தேன். தற்போது எங்கள் இரு நாடுகளும் எப்படி வளர்ந்து வருகின்றன என்பதை நாங்கள் விவாதித்தோம். அர்ஷாத் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐரோப்பிய வீரர்கள் முன்பு இதில் இருந்தனர். ஆனால் தற்போது நாங்கள் அவர்களின் நிலையை அடைந்து உள்ளோம்.

    இவ்வாறு நீரஜ் சோப்ரா கூறியுள்ளார்.

    ஈட்டி எறிதலில் பங்கேற்ற மற்ற இந்திய வீரர்களான கிஷோர் ஜெனா 5-வது இடத்தையும் (84.77 மீட்டர்), டி.பி.மானு 6-வது இடத்தையும் (84.14 மீட்டர்) பிடித்தனர்.

    ஆண்களுக்கான 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 5-வது இடத்தை பிடித்தது. முகமது அனாஸ், அமோஜ் ஜேக்கப், முகமது அஜ்மல், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் அடங்கிய அணி பந்தய தூரத்தை 2 நிமிடம் 59.92 வினாடியில் கடந்தனர். முன்னதாக தகுதி சுற்றில் இந்திய அணி ஆசிய சாதனையை முறியடித்து இருந்தது.

    Next Story
    ×