search icon
என் மலர்tooltip icon

    பாரிஸ் ஒலிம்பிக் 2024

    வினேஷ் போகத் கையில் வெள்ளி? - இன்றிரவு தீர்ப்பு
    X

    வினேஷ் போகத் கையில் வெள்ளி? - இன்றிரவு தீர்ப்பு

    • வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறையிட்டு உள்ளது.
    • கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    பாரீஸ்:

    பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் அவரது பதக்கம் பறிபோனது.

    இதை தொடர்ந்து தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று கோரி சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த அப்பீல் மனு வழக்கில் இன்று இரவு 9.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்குமா? என்று நாடே ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

    தெண்டுல்கர், கங்குலி, உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள் வினேஷ் போகத் வெள்ளி பதக்கத்துக்கு தகுதியானவர் என்று கூறி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த நிலையில் வினேஷ் போகத்தின் மனுவுக்கு எதிராக சர்வதேச மல்யுத்த சம்மேளனம் முறையிட்டு உள்ளது. அடிப்படை விதிமுறைப்படிதான் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார் என்று தனது மனுவில் குறிப்பிட்டு உள்ளது.

    இதற்கிடையே இந்த வழக்கில் நடுவரான ஆஸ்திரேலியாவின் டாக்டர் அன்னாபெல் பென்னட் முன்பு வினேஷ் போகத் வக்கீல்கள் ஹரீஷ் சால்வே, விதுஷ்பத்சிங்கானியா ஆகியோர் அளித்த வாதங்கள் விவரம் வெளியாகி உள்ளது. அவர்கள் கூறியதாவது:-

    ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீராங்கனை வினேஷ். அவர் ஒரேநாளில் மூன்று போட்டிகளில் கலந்து கொண்டார். இதில் உலகின் நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை வென்றார். போட்டிக்கு முன் அவர் அனுமதிக்கப்பட்ட எடைக்குள்தான் இருந்தார். செவ்வாய்க் கிழமை இரவுக்குள் அவரது எடை கிட்டத்தட்ட 3 கிலோ அதிகரித்தது.

    போட்டி நடைபெறும் இடத்திற்கும், வீராங்கனைகள் தங்கியுள்ள ஒலிம்பிக் கிராமத்திற்கும் இடைப்பட்ட தூரம் அதிகமாக இருந்தது. இதனால் அவரது எடைக் குறைப்பிற்கான நேரம் கிடைக்கவில்லை. மேலும் ஒரேநாளில் 3 போட்டி காரணமாக சரியான எடையை வைத்திருக்க முடியவில்லை.

    அடுத்தடுத்த போட்டிகளில் கலந்துகொள்ள அவர் உணவு எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. மேலும் ஒருவர் தொடர் போட்டிகளில் விளையாடுவதால் அவரது தசையின் எடை அதிகரிக்கும்.

    வினேஷ் இறுதிப் போட்டிக்கு முன், இரவு முழுவதும் விழித்திருந்தார். உடல் எடையைக் குறைக்க ஓடுதல், ஸ்கிப்பிங் செய்தார். மேலும், முடியை வெட்டி ரத்தத்தை வெளியேற்றும் அளவிற்கு முயற்சி செய்தார். இருப்பினும் அவரது எடை 100 கிராம் அதிகரித்து இருந்தது.

    100 கிராம் கூடுதல் எடை அவருக்கு எந்தவிதமான திறமையும் அளித்திருக்காது. இந்த அளவு மிகக் குறைவானது. இது தடகளத்தில் 0.1 முதல் 0.2 சதவிகிதம்தான்.

    மேலும் கோடை காலத்தில் வெப்ப நிலை காரணமாக தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கலாம். ஒரேநாளில் 3 போட்டிகளில் இருந்ததால் அவரது உடல் ஆரோக்கியத்திற்காக அவர் கூடுதல் தண்ணீர் எடுத்திருக்கலாம்.

    எனவே எந்த ஒரு மோசடியிலும், பதக்கத்தைப் பெறுவதற்கு தவறான முயற்சியில் அவர் ஈடுபடவில்லை. கடின உழைப்பால் அவர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். எனவே அவருக்கான வெள்ளி பதக்கத்தை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வாதங்களை முன் வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    Next Story
    ×