search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 15 பதக்கம்
    X

    காமன்வெல்த் விளையாட்டு போட்டி: இந்தியாவுக்கு ஒரே நாளில் 15 பதக்கம்

    • இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.
    • நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.

    பர்மிங்காம்:

    22-வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 9-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கலம் ஆக மொத்தம் 40 பதக்கம் பெற்று இருந்தது.

    நேற்றைய 10-வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 5 தங்கப்பதக்கம் கிடைத்தது.

    பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் பங்கேற்ற நிதுன் கங்காஸ் முதல் தங்கத்தை வென்றார். ஆண்களுக்கான குத்துச்சண்டையில் 51 கிலோ பிரிவில் அமித் பங்கால் தங்கப்பதக்கத்தை பெற்றார்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் எல்டோஸ் பவுல் தங்கம் வென்று முத்திரை பதித்தார். அதைத் தொடர்ந்து குத்துச்சண்டை மூலம் இந்தியாவுக்கு 4-வது தங்கம் கிடைத்தது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிகாத் ஜரீன் தங்கப்பதக்கம் பெற்று கொடுத்தார்.

    இரவில் நடந்த கலப்பு இரட்டையர் டேபிள் டென்னிஸ் போட்டி மூலம் நேற்று இந்தியாவுக்கு 5- வது தங்கம் கிடைத்தது.

    கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சரத்கமல்- ஸ்ரீஜா அகுலா ( தெலுங்கானா ) ஜோடி மலேசியாவைச் சேர்ந்த சூங்-லியன் ஜோடியை எதிர் கொண்டது. இதில் சரத்கமல் ஜோடி 3-1 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் மற்றொரு தமிழக வீரர் சத்யனுடன் இணைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றார். மேலும் சரத்கமல் ஒற்றை பிரிவில் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றார். சத்யன் அரைஇறுதியில் தோற்றதால் வெண்கல பதக்கத்துக்கு மோதுகிறார்.

    மகளிர் கிரிக்கெட்டிலும், குத்துச்சண்டையிலும் எதிர்பார்த்த தங்கம் வாய்ப்பு கிடைக்காமல் போனது. பெண்கள் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

    ஆண்களுக்கான 92 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவு குத்துச்சண்டையில் சாகர் அக்லாவாத் வெள்ளிப் பதக்கம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரரிடம் தோற்றார்.

    ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் பந்தயத்தில் அப்துல்லா அபுபக்கர் வெள்ளி பதக்கம் பெற்றார்.

    இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் நடைபந்தயத்தில் சந்தீப் குமாரும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அன்னு ராணியும் வெண்கல பதக்கம் பெற்றனர்.

    ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல் -சவுரவ் கோஷல் ஜோடி வெண்கல பதக்கம் பெற்றது. இந்த ஜோடி ஆஸ்திரேலிய ஜோடியை 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.

    பேட்மின்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி வெண்கலம் வென்றார். அவர் 21-15, 21-18 என்ற கணக்கில் சிங்கப்பூர் வீரர் ஹெங்கை தோற்கடித்தார்.

    இதே போல பெண்களுக்கான பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காயத்ரி கோபிசந்த்-திரிஷா ஜோலி ஜோடியும் வெண்கல பதக்கம் பெற்றது. ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து மற்றும் லக்சயா சென் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர்.

    நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 15 பதக்கம் கிடைத்தது.

    நேற்றைய போட்டி முடிவில் இந்தியா 18 தங்கம், 15 வெள்ளி, 22 வெண்கலம் ஆக மொத்தம் 55 பதக்கம் பெற்று தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.

    Next Story
    ×