search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்ன மருதூர் அருகே 1800 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு- பதட்டம் நீடிப்பு
    X

    சின்ன மருதூர் அருகே 1800 பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு- பதட்டம் நீடிப்பு

    • 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

    பரமத்திவேலுார்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வடகரையாத்தூர் ஊராட்சி கரபாளையத்தில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் ஆலை கொட்டைகையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த மே மாதம் 13-ந் தேதி நள்ளிரவில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமான ஆலை கொட்டகையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையை உடைத்த மர்ம நபர்கள் வட மாநில தொழிலாளர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தனர். இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் படுகாயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜேஷ் என்பவர் உயிரிழந்தார். இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக துப்பாக்கி ஏந்திய படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு புதுப்பாளையம் பகுதியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை மற்றும் பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    இதேபோல் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் (வயது 60). இவரது விவசாய தோட்டம் ஜேடர்பாளையம் அருகே சின்ன மருதூர் செல்லும் வழியில் விவசாய நிலம் உள்ளது. அதில் 2 ஏக்கரில் சுமார் 3,000 பாக்கு மரம் நடவு செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து தோட்டத்துக்காரர் தங்கமுத்து அதிகாலை தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது சவுந்தர்ராஜன் தோட்டத்தில் சுமார் 1800-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமுத்து நிலத்தின் உரிமையாளர் சவுந்தர்ராஜனுக்கும், ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா தலைமையிலான போலீஸ் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அந்த பகுதியில் உள்ள மரங்களில் குற்றவாளிகளின் கைரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள் மேலும் பாக்கு மரம் இருக்கும் இடத்திற்கு நடந்து சென்றவர்களின் கால் தடத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஊர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி வருகின்றன. பாக்கு மரம் வெட்டப்பட்ட பகுதிகளுக்கு போலீசார், வருவாய்த்துறையினர் தவிர மற்ற யாரையும் அனுமதிக்கவில்லை.

    Next Story
    ×