search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கள்ளநோட்டு பிடிபட்ட விவகாரம்: விருதுநகரை சேர்ந்த மேலும் 2 பேர் சிக்கினர்
    X

    கள்ளநோட்டு பிடிபட்ட விவகாரம்: விருதுநகரை சேர்ந்த மேலும் 2 பேர் சிக்கினர்

    • குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே கடந்த மாதம் 6-ந் தேதி மூன்றடைப்பு போலீசார் வாகன சோதனையில் ஒரு காரில் ரூ.75 லட்சம் கள்ள நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்த சீமைசாமி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோதை நாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணு சங்கர், தங்கராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் கள்ள நோட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து விசாரித்த போது பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி நல்ல ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு கள்ள ரூபாய் நோட்டுகளை அந்த கும்பல் விநியோகம் செய்து வந்தது தெரிய வந்தது. இதில் நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த பலரும் ஏமாந்துள்ளது தெரியவந்தது. இதனிடையே இந்த கள்ளநோட்டு கடத்தலில் மூளையாக செயல்பட்ட விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பல்லப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (38) என்பவர் கள்ள நோட்டுகளை அச்சடித்து கொடுத்து வந்ததும், தற்போது கள்ள நோட்டு சிக்கிய சம்பவத்திற்கும் அவர் மூளையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

    இந்நிலையில் ராஜேந்திரனிடம் நடத்திய விசாரணையில், அவரது கூட்டாளிகளான விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை நேற்று போலீசார் மடக்கி கண்டுபிடித்தனர். அவர்களை நேற்று இரவு வரையிலும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரித்தனர்.

    அதில் பிடிபட்ட 2 பேரும் சிவகாசியில் உள்ள ஒரு குடோனில் கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரத்தை பயன்படுத்தி கள்ள நோட்டுகள் அச்சடித்து கொடுப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து 2 பேரையும் அழைத்துக்கொண்டு போலீசார் சிவகாசிக்கு விரைந்துள்ளனர்.

    அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய கலர் பேப்பர்கள், அச்சடிப்பு எந்திரங்கள் உள்ளிட்ட வைகளை பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து வேறு எங்கும் குடோன்கள் வைத்துள்ளனரா? இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து போலீசார் கூறுகையில், இந்த கள்ள நோட்டு விவகாரத்தில் தொடர்புடைய கும்பல் முழுக்க முழுக்க விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் தான். இவர்களுடன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.

    குமரி மாவட்டத்திற்கு கொண்டு செல்லும்போதுதான் இந்த கள்ளநோட்டு கும்பல் பிடிபட்டது. எனவே அங்கு வேண்டுமானால் இந்த கும்பலின் தரகர்கள் செயல்பட வாய்ப்பு இருக்கிறது என்றனர்.

    Next Story
    ×