search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒற்றை யானை தாக்கி 2 பெண்கள் பலி: உறவினர்கள்-கிராம மக்கள் சாலை மறியல்
    X

    ஒற்றை யானை தாக்கி 2 பெண்கள் பலி: உறவினர்கள்-கிராம மக்கள் சாலை மறியல்

    • வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.
    • இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை நேற்று முன்தினம் ஊருக்குள் புகுந்து தேர்பேட்டை டி.ஜி தொட்டி பகுதியில் குடியிருப்பு தெருக்களில் வழியாக உலா வந்தது.

    இதை பார்த்த மக்கள் பதறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டனர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனே தேன்கனிக்கோட்டை வன ஊழியர்கள் விரைந்து வந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானையை பட்டாசு வெடித்தும் தாரை தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பியும் காட்டுப் பகுதிக்கு விரட்டியடித்தனர்.

    இதனால் ஒற்றை யானை வனப்பகுதிக்கு சென்றதாக நினைத்து கொண்ட தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமத்தில் பொதுமக்கள் வழக்கம் போல் காலையில் எழுந்து தோட்ட வேலையில் ஈடுபட்டு வந்தனர்.

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அன்னியாளம் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி வசந்தம்மா (வயது33) கூலித்தொழிலாளியான இவர் இன்று அதிகாலை தோட்ட வேலைக்கு செல்வதற்காக வீட்டைவிட்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதாக கருதிய ஒற்றை யானை மீண்டும் ஊருக்குள் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

    இதனை கண்ட வசந்தம்மா அங்கிருந்து தப்பி ஒட முயன்றார். இதனை கண்ட அந்த ஒற்றை யானை வசந்தம்மா தூக்கி வீசி தாக்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் வசந்தம்மா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த யானையை விரட்டியடித்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த ஒற்றை யானை அங்கிருந்து புறப்பட்டு தளி அருகே உள்ள தாசர்பள்ளி அருகே சென்றது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வந்தம்மா என்ற கூலித் தொழிலாளி இன்று காலை வேலைக்கு செல்வதற்காக வீட்டை வெளியே வந்தார். அப்போது அவரை யானை தாக்கியது. இதில் அஸ்வந்தம்மாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேன்கனிக்கோட்டையில் ஒற்றை யானை அடுத்தடுத்து 2 பெண்களை தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுத்தீப் போல் பரவியது.

    வசந்தம்மாவின் உறவினர்கள் மற்றும் அன்னி யாளம் கிராம பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சோதனை சாவடி முன்பும், தாசர்பள்ளி கிராம மக்கள் அதே பகுதியிலும் திடீரென்று திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இருவேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விடவேண்டும் என்றும், யானை தாக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்பன கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து அந்தந்த பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று மறியலில் ஈடுபட்டு வருபவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.

    Next Story
    ×