search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
    X

    கலாஷேத்ரா மாணவிகள் பாலியல் வழக்கில் சைதாப்பேட்டை கோர்ட்டில் 250 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

    • பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர்.
    • பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர்.

    ஆலந்தூர்:

    சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா ருக்மணி தேவி கவின் கலைக்கல்லூரி உள்ளது. பாரம்பரிய பெருமைமிக்க இந்த கல்லூரி மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் மாதம் இந்த கல்லூரியில் படிக்கும் மாணவிகள் சிலர் பேராசிரியர் ஹரிபத்மன், தங்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக பெண் வன்கொடுமை உள்பட 3 பிரிவுகளின் கீழ் அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிபத்மனை கைது செய்தனர். இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் விசாரணை நடத்தியது. அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை போலீஸ் துறைக்கு பரிந்துரை செய்தது.

    இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள், பேராசிரியர்கள் என 60-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்தனர். இந்த வழக்கில் புலன் விசாரணை முடிந்து 250 பக்க குற்றப்பத்திரிகையை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் வர உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் இந்த வழக்கில் கைதான பேராசிரியர் ஹரிபத்மன், 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததையடுத்து கடந்த ஜூன் 6-ந் தேதி அவருக்கு கோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் வெளிவந்த ஹரிபத்மன் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×