search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை
    X

    ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் 2-வது நாளாக பாதுகாப்பு ஒத்திகை

    • அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
    • சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் சாா்பில் கடலோர மாவட்டங்களில் சாகா் கவாச் என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு கடல் வழியாக நுழைந்த தீவிரவாதிகள், தாக்குதல் நடத்தினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பலியாகினா். இதைத் தொடா்ந்து கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவதை தடுக்கவும், மீண்டும் மும்பை தாக்குதல் போன்ற அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்கும் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கடலோர மாவட்டங்களில் 6 மாதங்களுக்கு ஒரு முறை தீவிரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று (29-ந்தேதி) காலை 6 மணிக்கு தொடங்கி, ஒத்திகை நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியிலும் இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

    இதில் கடலோர பாதுகாப்பு படை, கமாண்டோ பிரிவு, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீசாா், குற்றப்பிரிவு போலீசாா், தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம், மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் காவல் துறையை சோ்ந்த பல்வேறு பிரிவினா் இணைந்து ஒத்திகையை நடத்தினர். நேற்று நடந்த ஒத்திகையில் ராமேசுவரத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த 16 பேரை மடக்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் பாதுகாப்பு ஒத்திகை இன்று 2-வது நாளாக நடந்தது.

    பாதுகாப்பு ஒத்திகையை முன்னிட்டு ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம், தொண்டி, தேவிபட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட கடலோர பகுதி முழுவதையும் போலீசார் தங்களின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனா்.

    இதையடுத்து கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டது. சாலைகளில் தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனா். கடலோரத்தில் வாழும் மீனவர்களுக்கு சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் தென்பட்டால் உடனடியாக தெரிவிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

    Next Story
    ×