search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதுமலை வனப்பகுதியில் செத்து கிடந்த 3 புலிகள்
    X

    முதுமலை வனப்பகுதியில் செத்து கிடந்த 3 புலிகள்

    • 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது.
    • புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது.

    மசினகுடி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட முதுமலை வனப்பகுதியில் காட்டு யானைகள், புலிகள், கரடிகள், மான்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. இதுதவிர தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வன சரகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் நேற்று முன்தினம் மாலை ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 புலி குட்டிகள் செத்து கிடந்தன. 2 புலி குட்டிகளும் பிறந்து 2 வாரமே ஆனது தெரியவந்தது. இதில் ஒரு புலி குட்டியின் உடல் மிகவும் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து உடனே வனத்துறை ஊழியர்கள், புலிகள் காப்பக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் அருண் மற்றும் வனத்துறையினர், கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செத்த புலி குட்டிகளின் உடல்களை பார்வையிட்டனர். பின்னர் புலி குட்டிகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புலி குட்டிகளின் உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருந்தது தெரியவந்தது. ஆனால், புலி குட்டிகள் எப்படி இறந்தது என்பது தெரியவில்லை.

    இதேபோல் நேற்று ஊட்டி அருகே நடுவட்டம் பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் ஒரு புலி செத்து கிடந்தது. அது 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி என்பது தெரியவந்தது. ஆனால் அந்த புலி எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. மற்ற வனவிலங்குகளுடன் சண்டையிட்டதில் புலி இறந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் புலி செத்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×