search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுராந்தகம் அருகே 5 பேர் பலி: கள்ளச்சாராயம் விற்ற மேலும் ஒருவர் கைது
    X

    மதுராந்தகம் அருகே 5 பேர் பலி: கள்ளச்சாராயம் விற்ற மேலும் ஒருவர் கைது

    • செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.
    • விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் அருகே உள்ள சித்தாமூர் அடுத்த பெருங்கரணை, இருளர் பகுதியை சேர்ந்த சின்ன தம்பி (வயது 30), அவரது மாமியார் வசந்தா ஆகியோர் விஷசாராயம் குடித்து பலியானார்.

    அவர்களுடன் விஷ சாராயம் குடித்த சின்னத் தம்பியின் மனைவி அஞ்சலி (22)செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    இதேபோல் விஷசாராயம் குடித்ததில் சித்தாமூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த வென்னியம்பன் (65) , அவரது மனைவி சந்திரா (55) பெருங்கருணை கிராமத்தைச் சேர்ந்த முத்து (55) ஆகியோரும் அடுத்தடுத்து இறந்தனர்.

    இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷசாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்து உள்ளது.

    மேலும் விஷசாராயம் குடித்ததில் உடல் நிலை பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விஷசாராயம் விற்றதாக அமாவாசை என்பவரை ஏற்கனவே போலீசார் கைது செய்து இருந்தனர். அவரிடம் விசாரணை நடந்து வந்தது. அவர் செய்யூர் அருகே உள்ள ஊதியூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவரிடம் இருந்து சாராயத்தை வாங்கியதாக தெரிவித்தார்.

    இதையடுத்து விஷ சாராயம் விற்றதாக வேலுவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    இதற்கிடையே விஷ சாராயத்தை விற்ற அமாவாசையும் குடித்து இருந்தார். இதில் அவரது உடல் நிலையும் சற்று பாதிக்கப்பட்டு உள்ளது. நேற்று மாலை அவரையும் போலீசார் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து உள்ளனர்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் சாராய வேட்டை நடந்து வருகிறது. விஷசாராயத்தை மேலும் வேறுயாராவது குடித்து இருந்தால் அவர்களையும் சிகிச்சைக்கு அனுப்ப விசாரித்து வருகின்றனர்.

    கள்ளச்சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விபரங்களையும் சேகரித்து வருகிறார்கள். இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். எனவே செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு சதாகர் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×