search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேய்பிறை தொடங்குவதால் சேலத்தில் இன்று ஒரே நாளில் 500 திருமணங்கள்
    X

    தேய்பிறை தொடங்குவதால் சேலத்தில் இன்று ஒரே நாளில் 500 திருமணங்கள்

    • நடப்பு 2022-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் இன்று 4-ந்தேதி மற்றும் 11, 12, 14 ஆகிய 4 நாட்கள் திருமண சுப முகூர்த்த தினங்களாகும்.
    • தேய்பிறை நாளில், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை சேலம் மக்கள் தவிர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    சேலம்:

    தீப கார்த்திகை தீப திருவிழா வருகிற 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு அடுத்த நாள் (7-ந்தேதி) பவுர்ணமி நாள் ஆகும். அதன் பிறகு தேய்பிறை தொடங்குகிறது.

    குறிப்பாக, நடப்பு 2022-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் இன்று (4-ந்தேதி) மற்றும் 11, 12, 14 ஆகிய 4 நாட்கள் திருமண சுப முகூர்த்த தினங்களாகும். இதில் இன்றைய தேதியை தவிர மற்ற 3 நாட்களும் தேய்பிறையில் வருகிறது.

    தேய்பிறை நாளில், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்ச்சிகளை சேலம் மக்கள் தவிர்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வருகிற 16-ந்தேதி மார்கழி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்திலும் சுப நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுகிறார்கள்.

    இதனால் இன்று ஒரே நாளில் சேலம் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் திருமணங்கள் நடைபெற்றன. சேலம் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள திருமண மண்டபங்கள், சிறிய அளவிலான மண்டபங்கள், சமுதாய கூடங்கள் திருமண கோஷ்டியினரால் நிரம்பி வழிந்தன. அதுமட்டுமின்றி மணமகன், மணமகள் வீடுகள் முன்பு போடப்பட்ட திருமண பந்தல்கள், நட்சத்திர ஓட்டல் கூட்ட அரங்குகளிலும் திருமண நிகழ்ச்சிகள் களை கட்டியது.

    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், உத்தமசோழபுரம் கைலாசநாதர் கோவில், ஊத்துமலை முருகன் கோவில், காசிவிஸ்வநாதர் கோவிலில் திருமணங்கள் நடந்தன. மேலும் ஏற்காடு அடிவாரம் அறுபடை முருகன் கோவில், அம்மாப்பேட்டை செங்குந்தர் பாலசுப்பிரமணியர் கோவில், அயோத்தியப்பட்டணம் ராமர் கோவில், செட்டிச்சாவடி முருகன் கோவில், அழகாபுரம் முருகன் கோவில், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில், தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் என இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள், தனியார் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களிலும் திருமணங்கள் நடைபெற்றன.

    மாவட்டம் முழுவதும் இன்று ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இதனால் புரோகிதர்களுக்கு மவுசு அதிகரித்தது. ஒரே புரோகிதர் பல திருமணங்களுக்கு ஒத்துக்கொண்டதால் கார்களிலும், மொபட் உள்ளிட்ட வாகனங்களிலும் புரோகிதர்கள் திருமணம் நடக்கும் இடங்களுக்கு அவசர அவசரமாக சென்று திருமணங்களை நடத்தி வைத்தனர். மாவட்டம் முழுவதும் திருமண விழா வாகனங்கள் அதிக அளவில் செல்வதை காண முடிந்தது.

    Next Story
    ×