search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காதலித்து உறவு கொண்டு விட்டு ஏமாற்றிய காதலனை போராடி திருமணம் செய்த பட்டதாரி பெண்
    X

    காதலித்து உறவு கொண்டு விட்டு ஏமாற்றிய காதலனை போராடி திருமணம் செய்த பட்டதாரி பெண்

    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
    • போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    குளச்சல்:

    குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே உள்ள பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிறாஸ் (வயது 29). என்ஜினீயரான இவர், துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

    நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பட்டதாரி பெண்ணுடன் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர்.

    லெனின் கிறாஸ் ஊருக்கு வந்தபோது, காதல் ஜோடியினர் பல்வேறு பகுதிகளில் ஒன்றாக சுற்றி வந்தனர். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண்ணுடன் உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர் வெளிநாடு சென்ற லெனின் கிறாஸ், காதலிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். தொடர்ந்து வாட்ஸ் அப் மூலம் இருவரும் தினமும் பேசி வந்தனர்.

    இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிறாஸ் ஊர் திரும்பினார். அவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர்.

    இந்த தகவல் காதலிக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காதலன் லெனின் கிறாசை தேடி வந்தார். அப்போது தான் அவருக்கு திருமண தேதி பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

    உடனடியாக சைமன் காலனிக்கு விரைந்து சென்ற காதலி பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் 11-ந் தேதி லெனின் கிறாசிற்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

    திருமண நேரத்தில் ஆலயத்தில் சென்று காதலனின் திருமணத்தை நிறுத்திய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். மனுவை பரிசீலித்த அவர், நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர் அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், காதலியை திருமணம் செய்யும்படி, லெனின் கிறாசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர். இதையடுத்து இருவரும் குளச்சலில் உள்ள ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

    வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்த காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்தி 9 நாட்கள் போராட்டம் நடத்திய காதலியின் துணிச்சலை சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

    Next Story
    ×