search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. இருக்காது என்பதா?: பிரதமர் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி
    X

    தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. இருக்காது என்பதா?: பிரதமர் பேச்சுக்கு ஆ.ராசா பதிலடி

    • ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் நாட்டில் சட்டம் இருக்காது.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலைத்திடலில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர் தமிழை வளர்த்தனர். இவர்களை தாண்டி தற்போது மோடியிடம் இருந்து இந்தியாவை காப்பாற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார்.

    மணிப்பூரில் ஒரு கிறிஸ்தவ பெண்ணை 200 பேர் நிர்வாணப்படுத்தி கற்பழித்தனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த மாநிலத்துக்கு பிரதமர் மோடி இதுவரை செல்லவில்லை. ஏனென்றால் அந்த மாநில முதலமைச்சர் பா.ஜனதாவை சேர்ந்தவர்.

    பாராளுமன்ற கூட்டத்தில் ஒரு மணி நேரம் கேள்வி நேரத்திற்கு ஒதுக்கப்படும். நாட்டில் என்னென்ன பிரச்சனைகள் என்பதை பிரதமர் கேட்டு இந்த கேள்வி நேரம் மூலமாக நன்கு தெரிந்து கொள்ள முடியும்.

    இதுவரை கேள்வி நேரத்திற்கு பிரதமர் மோடி வந்தது இல்லை. இப்படி ஜனநாயக மரபுகளை சிதைக்கின்ற ஒரு பிரதமரை நான் இதுவரை கண்டதில்லை.

    நெல்லையில் நடந்த கூட்டத்தில் மோடி பேசும்போது, பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் தி.மு.க. இருக்காது என்று கூறி உள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தி.மு.க. இருக்காது என்றால் இந்தியாவே இருக்காது. அதாவது தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் இந்தியாவே இருக்காது. இந்தியா என்பது ஒரு நாடு அல்ல, துணைக்கண்டம். ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு மொழி, மரபு உண்டு. அவற்றை காப்பதுதான் மத்திய அரசின் கடமை.

    ஆனால் ஒரே மொழி, ஒரே மதம் ஆகியவற்றை கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்து விட்டால் நாட்டில் சட்டம் இருக்காது. அப்படி சட்டம் இல்லை என்றால் இந்தியாவே இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×