search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு
    X

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

    • கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர்.
    • தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர்.

    ராமேசுவரம்:

    காசிக்கு நிகராக கருதப்படும் பிரசித்தி பெற்ற ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் முக்கிய கடமையாக கருதப்படுகிறது.

    இதனால் மாதத்தில் அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிவார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது.

    கடந்த மாதம் 17-ந்தேதியில் வந்த முதல் ஆடி அமாவாசையில் ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். 2-வது ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். இதற்காக நேற்று காலை முதல் வேன், பஸ்கள் மூலமாக வந்த அவர்கள் அமாவாசை நாளான இன்று அதிகாலை அக்னி தீர்த்த கடற்கரையில் திரண்டனர். அங்கு புனித நீராடிய பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதன் காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. தர்ப்பணம் கொடுத்த பின் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். தொடர்ந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

    ராமேசுவரத்தில் நேற்றும், இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    கோவில் வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று காலை ராமேசுவரம் பஸ் நிலையம் மற்றும் கோவிலை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இருந்து முக்கிய ஊர்களுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதேபோல் ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அங்குள்ள கடலில் அமைந்துள்ள நவக்கிரகங்களை வழிபட்டனர்.

    இதேபோல் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் 3 ஆயிரம் அடி உயரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்ய கடந்த 12-ந்தேதி முதல் நாளை வரை 6 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

    ஆடி அமாவாசையான இன்று சுவாமியை வழிபட நேற்று முதலே தாணிப்பாறை மலையடிவாரத்தில் ஆயிரக்கணக்கான பக்தகர்கள் குவிந்தனர். இன்று அதிகாலை 4 மணி முதல் பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வனத்துறையினர் செய்திருந்தனர். இன்று ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள், இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதற்காக அதிகாலை முதலே நெல்லை மாவட்டம் பாபநாசம் கோவில் முன்புள்ள தாமிரபரணி ஆற்றுபடித்துறையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் படித்துறைகளில் அமர்ந்து தர்ப்பணம் செய்து எள்ளும் நீரும் இறைத்தனர்.

    குடும்பத்தினருடன் கார்கள், வேன்களில் வந்து பெரும்பாலானோர் தர்ப்பணம் கொடுத்ததை பார்க்க முடிந்தது. இதனால் பாபநாச நாதர் சுவாமி கோவில் முன்பு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதேபோல் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி உள்ளிட்ட இடங்களில் தாமிரபரணி நதிக்கரையோரம் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன் குறுக்குத்துறை, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் படித்துறை, குட்டத்துறை முருகன் கோவில் படித்துறை, அருகன் குளம் ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் தாமிரபரணி நதியில் நீராடி, பின்னர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். உவரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் இன்று அதிகாலையில் இருந்தே பொதுமக்கள் வந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தூத்துக்குடியில் கடற்கரையோரங்களில் ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அருவிக்கரையில் வரிசையாக அமர்ந்திருந்த அர்ச்சகர்களிடம் முன்னோர்கள் பெயர் மற்றும் நட்சத்திரம் போன்ற விவரங்களை கூறி எள்ளும் தண்ணீரும் வைத்து மக்கள் தர்ப்பணம் செய்தனர்.

    உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    இதேபோல் குழித்துறை மகாதேவர் ஆலயத்தில் ஆடி அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் பலி தர்ப்பணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×