என் மலர்
தமிழ்நாடு
டிக்டோ ஜாக் அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்- அமைச்சர் பேட்டி
- 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
- 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.
தஞ்சாவூா்:
தஞ்சை முனிசிபல் காலனியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, 1 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை, மேல்நிலை மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்குதல் என முப்பெரும் விழா நடைபெற்றது.
இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி, மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சீருடை , சைக்கிள்கள் ஆகியவற்றை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
தமிழக முதலமைச்சரின் உத்தரவுபடி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள், சீருடைகள், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன.
டிக்டோ ஜாக் அமைப்பினர் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ள நிலையில், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதில் 5 அல்லது 6 கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் முதன்மைச் செயலரும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது நிதி சார்ந்த கோரிக்கைகள், நிதி சாராத கோரிக்கைகள் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிந்து, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி குறித்து மத்திய கல்வித் துறை மந்திரி தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். ஆண்டுதோறும் வழங்கக்கூடிய இந்த நிதியை பல காரணங்களைக் கூறி ஏன் நிறுத்தப்பட்டது என்றும், ஏறத்தாழ 60 லட்சம் மாணவர்களை மனதில் வைத்து, உடனடியாக நிதியை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம். மத்திய அரசு அதிகாரிகளுடன் தமிழக அரசு அதிகாரிகள் கலந்து பேசி கூறுமாறும், அதற்கான முயற்சி எடுப்பதாகவும் மத்திய மந்திரி கூறினாலும், முறைப்படி பதில் எதுவும் வரவில்லை.
மத்திய மந்திரியிடம் என்ன பதில் வருகிறது என்பதைப் பார்த்து, தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.