search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புழல் பகுதியில் ஏ.டி.எம். மையம், ஓட்டலில் தீ விபத்து- லட்சக்கணக்கில் பணம் எரிந்து சாம்பலானது
    X

    புழல் பகுதியில் ஏ.டி.எம். மையம், ஓட்டலில் தீ விபத்து- லட்சக்கணக்கில் பணம் எரிந்து சாம்பலானது

    • ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
    • அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    செங்குன்றம்:

    சென்னை புழல் பகுதியில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஓட்டலும், அதன் அருகே தனியார் ஏ.டி.எம். மையமும் இயங்கி வருகின்றன. நேற்று இரவு ஓட்டலில் வியாபாரத்தை முடித்துவிட்டு அதன் உரிமையாளர் பூட்டிவிட்டு சென்றனர்.

    இன்று அதிகாலை தனியார் ஏ.டி.எம். மையமும், ஓட்டலும் திடீரென தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுத்தனர். செங்குன்றம், மாதவரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 2மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் தனியார் ஏ.டி.எம். எந்திரம், ஓட்டலில் இருந்த மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. ஏ.டி.எம். மையத்தில் எந்திரம் முற்றிலும் எரிந்த நிலையில் பல லட்சம் ரூபாய் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகே எந்திரத்தில் இருந்து தீயில் கருகிய பணத்தின் மதிப்பு தெரியவரும்.

    இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனியார் ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவு காரணமாக தீப்பற்றி ஏ.டி.எம். மையத்தில் பற்றிய தீ அருகில் இருந்த ஓட்டலுக்கு பரவியது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.

    Next Story
    ×