search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொழில் அதிபரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மூளையாக செயல்பட்ட நபர் யார்?
    X

    தொழில் அதிபரிடம் கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் மூளையாக செயல்பட்ட நபர் யார்?

    • மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.
    • சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார்.

    கோவை:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (வயது27). தொழில் அதிபரான இவர் கொச்சியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    கடந்த 12-ந் தேதி அஸ்லாம் சித்திக் தனது நிறுவனத்திற்கு தேவையான கம்ப்யூட்டர் வாங்க பெங்களூருவுக்கு சென்றார். அங்கு பொருட்களை வாங்கி விட்டு மறுநாள் மாலை கேரளாவிற்கு புறப்பட்டார்.

    இந்த நிலையில் அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து செல்வதற்காக பெங்களூரு வந்ததாக நினைத்த கேரளாவை சேர்ந்த கும்பல் பெங்களூருவில் இருந்து 3 கார்களில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.

    அஸ்லாம் சித்திக் கோவை வழியாக கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அதிகாலையில் மதுக்கரை எல் அண்டு டி நெடுஞ்சாலையில் பாலத்துறை பகுதியில் அவர் கார் சென்று கொண்டிருந்தது.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள், தங்கள் காரை வேகமாக இயக்கி சென்று, அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்தனர். பின்னர் காரில் இருந்து திபு, திபுவென இறங்கிய 7 பேர் கும்பல், அவரது காரை நோக்கி வேகமாக சென்று, கத்தி, அரிவாள் உள்ளிட்டவற்றை காரை நோக்கி வீசி கண்ணாடியை உடைத்தனர். மேலும் காரில் கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போது சுதாரித்து கொண்ட, அஸ்லாம் சித்திக் உடனடியாக காரை அருகே இருந்த சுங்கச்சாவடிக்கு வேகமாக ஓட்டி சென்று தப்பித்தார். அங்கு ரோந்து பணியில் போலீசார் இருந்தனர். இதனை பார்த்த கும்பல், அங்கிருந்து தப்பி சென்றது.

    இதுகுறித்து அஸ்லாம் சித்திக் மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அஸ்லாம் சித்திக்கின் காரை வழிமறித்து தாக்கியது கேரள மாநிலத்தை சேர்ந்த சிவ்தாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) என்பதும் தெரியவந்தது.

    சிவ்தாஸ் மற்றும் அஜய்குமார் ஆகியோர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றுவதும், விஷ்ணு ராணுவத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

    கேரளாவில் செயல்பட்டு வரும் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள், கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு சென்று ஹவாலா பணம் எடுத்து வரும் கார்களை தாக்கி கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    அப்படி ஒரு குழு மூலம் அஸ்லாம் சித்திக் பெங்களூருக்கு ஹவாலா பணத்தை எடுத்து வந்திருக்கிறார் என்ற ரகசிய தகவல் பெங்களூரில் இருக்கும் கேரளாவை சேர்ந்த குழுவுக்கு கிடைத்துள்ளது.

    அந்த குழுவினர் அஸ்லாம் சித்திக்கின் காரை பின்தொடர்ந்து தாக்கி ஹவாலா பணத்தை கொள்ளையடிக்க கூறியுள்ளனர்.

    அதன்படியே இந்த 7 பேர் கும்பல் 3 கார்களில் அஸ்லாம் சித்திக்கை பெங்களூருவில் இருந்து பின் தொடர்ந்து வந்துள்ளனர்.

    கோவை அருகே வந்ததும், காரை வழிமறித்து சேதப்படுத்தி, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், போலீசார் ரோந்து பணியில் நிற்பதை பார்த்ததும் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சிவ்தாஸ், அஜய்குமார், விஷ்ணு, ரமேஷ்பாபு ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த வழக்கில் கைதாகி உள்ள ராணுவ வீரரான விஷ்ணு, கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு வந்துள்ளார்.

    அதன்பின்னர் அவர் பணிக்கு செல்லவில்லை. அவர் எதற்காக ராணுவத்தில் இருந்து விடுப்பு எடுத்து வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் விடுப்பில் வந்த அவர் எங்கெங்கு சென்றார். யாருடன் எல்லாம் தொடர்பு வைத்துள்ளார். இவருக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளதா? வேறு எங்காவது நடந்த வழிப்பறியில் இவருக்கு தொடர்பு உள்ளதா?

    அஸ்லாம் சித்திக் ஹவாலா பணம் எடுத்து வர போகிறார் என்ற தகவலை இவர்களுக்கு சொன்னவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×