search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை பந்த் அறிவிப்பு
    X

    கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை பந்த் அறிவிப்பு

    • உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு.
    • மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம்.

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் அமைந்துள்ளது கப்பலூர் சுங்கச்சாவடி. கப்பலூரில் உள்ள சுங்கச்சாவடி விதிகளை மீறி நகரிலிருந்து 2 கி.மீ தொலைவுக்குள் உள்ளது. எனவே இதனை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகின்றனர். கப்பலூர் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு சுங்க வரி கட்டணம் வாங்காமல் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு 50 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு ஜூலை 10 முதல் அமலுக்கு வந்ததால் கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கப்பலூர் சுங்கச் சாவடியை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு கோரி நாளை முதல் மீண்டும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நிலையைப் போலவே உள்ளூர் மக்கள் சுங்கக் கட்டணம் இல்லாமல் கப்பலூர் சுங்கச்சாவடியில் செல்லலாம் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து, மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ சுற்றுவட்டார மக்கள் ஆதார் அட்டையை காண்பித்துவிட்டு சுங்கக் கட்டணம் இன்றி செல்லலாம் என்றும், உள்ளூர் மக்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் இடையூறு செய்யக்கூடாது எனத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    கப்பலூர் சுங்கச்சாவடியை சுற்றியுள்ள 7 கி.மீ. சுற்று வட்டாரத்தில் உள்ள உள்ளூர் மக்களுக்காக, கப்பலூர் சுங்கச் சாவடியில் பிரத்யேக வழி அமைக்க வழிவகை செய்யப்படும் என்றும் அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி நாளை திட்டமிட்டபடி பந்த் நடைபெறும் என கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு அறிவித்துள்ளது.

    Next Story
    ×