search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆந்திராவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்
    X

    ரெயில் பெட்டியில் பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்திய காட்சி

    ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆந்திராவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்

    • ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது
    • ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் தகவல் தெரிவித்து விட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார். இதைத்தொடர்ந்து ஈரோடு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து ஈரோடு போலீசார் உஷார்படுத்தப்பட்டு சூரம்பட்டி போலீசார் ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இதேபோல் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு விரைந்து சென்றனர். இவர்களுடன் ஈரோடு ரெயில்வே போலீசாரும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் ரெயில் நிலையம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

    ஈரோடு ரெயில்வே நுழைவு பகுதி, டிக்கெட் கொடுக்கும் இடம், அனைத்து நடைமேடைகள், பார்சல் வழங்கும் இடம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், கழிப்பறைகள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக சோதனை ஈடுபட்டனர்.

    இரவு நேரத்தில் ஈரோடு மார்க்கமாக அதிகமான ரெயில்கள் வந்து செல்வதால் பயணிகள் கூட்டம் நேற்று அதிகளவில் இருந்தது. திடீரென போலீசார் சோதனை செய்வதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பயணிகள் உடமை கடும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    அந்த சமயம் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த அனைத்து ரெயில்களையும் போலீசார் சோதனை செய்தனர். ஒவ்வொரு பெட்டியாக சென்று பயணிகள் உடமைகளையும் சோதனை செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் சோதனையில் ஈடுபட்ட பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தது யார்? என்று போலீசார் விசாரணை தொடங்கினர். அப்போது ஆந்திராவில் இருந்து வெடிகுண்டு புரளி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போனில் பேசி நபரின் டவர் ஆந்திராவை காட்டியது. இதையடுத்து இன்று காலை ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படையினர் ஆந்திரா விரைந்துள்ளனர்.

    Next Story
    ×