search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயம் சிகிச்சை பிரிவு தொடங்கப்படுமா? உயிரிழப்பு அதிகமாவதாக குற்றச்சாட்டு
    X

    அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயம் சிகிச்சை பிரிவு தொடங்கப்படுமா? உயிரிழப்பு அதிகமாவதாக குற்றச்சாட்டு

    • தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.
    • ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி 65 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 1967-ம்ஆண்டு 100 படுக்கை வசதியுடன் உருவானது. தற்போது மருத்துவக்கல்லூரியுடன் சுமார் 240 ஏக்கரில் செயல்படுகிறது. இந்த ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தற்போது 1500 படுக்கை வசதியுடன் உள்ளது. அனைத்து துறையை சேர்ந்த 30 மூத்த டாக்டர்கள் மற்றும் 90 உதவி மருத்துவர்கள், 140 செவிலியர்கள் ஆகியோர் தற்போது அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதி மக்கள் மற்றும் விழுப்புரம், திருவண்ணாமலை , காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை புறநகரை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். தினந்தோறும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர்.

    அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரசவ வார்டு, எலும்பு முறிவு , இருதய அறுவை சிகிச்சை பிரிவு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிவு, காய்ச்சல், கொரோனா சிகிச்சை உள்பட அனைத்துக்கும் தனித்தனி பிரிவுகள் உள்ளன.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய மருத்துவ கல்லூரி எனினும் இந்த ஆஸ்பத்திரியில் தீக்காய பிரிவு மற்றும் தலை காய அவசர சிகிச்சை பிரிவு இல்லை. இதனால் தீக்காயம் மற்றும் விபத்துக்களில் தலையில் பலத்த காயம் அடைந்து வருபவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருக்கிறது.

    நோயாளிகளை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பும் நிலை தொடர்கிறது. இதனால் ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகள் சென்னைக்கு சென்று சேர்வதற்குள் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியிலேயே தீக்காயம் மற்றும் தலைக்காயம் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டால் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் தீக்காயம், மற்றும் தலைக்காயம் சிகிச்சை பிரிவை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது உள்ள வாகன நெரிசலில் உயர்சிகிச்சைக்கு சென்னை சென்று சேர்வதற்குள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும் பிரசவ வார்டில் எல்லாவற்றிற்கும் பணம் கேட்டு தொல்லை கொடுக்கிறார்கள். கழிப்பறைகளில் கதவுகள் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையும் உள்ளது என்றனர்.

    Next Story
    ×