என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜயகாந்த் - விக்டர்
மூன்றாம் கட்ட நாடக நடிகர்களையும் தன்வசப்படுத்திய கேப்டன் விஜயகாந்த்
- சாப்பிடுவர்களின் அருகில் சென்று தோளில் தட்டிக்கொடுத்து கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று கூறும் விஜயகாந்த்தின் பாங்கு, பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிடும்.
- தீபாவளி, பொங்கல் நாட்களில் தன்னிடம் உதவிகள் கேட்டு வருவோருக்கு வேட்டி, பரிசுப்பொருள் கொடுத்து உபசரித்து அனுப்புவதை கடைசி மூச்சு உள்ளவரை கடைபிடித்தார்.
பள்ளிப்படிப்பை 10-ம் வகுப்புடன் நிறுத்திக்கொண்ட விஜயகாந்த், தனது சினிமா ஆசையை பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் தந்தையின் ரைஸ் மில் நிர்வாகத்தை திறம்பட கற்றபோதிலும், குறிப்பிட்ட காலத்தில் பெற்றோரும் பச்சைக்கொடி காட்டி மகனை ஆசீர்வதித்து அனுப்பி வைத்துள்ளனர். எம்.ஜி.ஆரின் வசீகரத்தில் கவர்ந்து இழுக்கப்பட்ட விஜயகாந்த் பின்னாலில் புரட்சிக்கலைஞராக வருவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
நடிகராக அவதாரம் எடுத்தாலும் தான் பிறந்து, வளர்ந்து, படித்த நாட்களையும், நபர்களையும் மறக்காமல் இருந்த விஜயகாந்த், மதுரை மேல ஆவணி மூல வீதியில் அலுவலகத்தையும் அமைத்தார். சென்னையில் இருந்து மதுரைக்கு எப்போது வந்தாலும், வீட்டிற்கு சாப்பிட செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களை அலுவலகத்திலேயே கழித்தார்.
அப்போதுதான் அவரை சந்தித்த நாடக நடிகர்களை விஜயகாந்த் பெரிதும் கவர்ந்தார். இதுபற்றி தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக்குழு செயலாளரும், குறும்பட இயக்குனருமான விக்டர் கூறியதாவது:-
சினிமாவில் முகம் தெரிந்தாலே நடிகர்களாக தங்களை பாவித்துக்கொண்டு அதன் மூலம் வாழ்வாதாரம் தேடிய மூன்றாம் கட்ட கலைஞர்களையும், கதாநாயகனாக வலம் வந்த விஜயகாந்த் எப்போதுமே தட்டிக் கழித்தது இல்லை. அதனை விஜயகாந்த்தும், அவரது நண்பருமான அ.செ.இப்ராஹிம் ராவுத்தரும் தங்களது வாழ்நாளில் கடைசி வரை கட்டிக்காத்துள்ளனர்.
படப்பிடிப்பு தளத்தில் கேரவேனுக்கு சாப்பிட செல்லும் விஜயகாந்த், சாப்பாட்டில் கை வைக்கும் முன்பு, தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்கள், அனைத்து வகையான ஊழியர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் சாப்பாட்டை சென்று பார்ப்பார். தனக்கு கொடுக்கும் சாப்பாடுதான் அவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
அதேபோல் சாப்பிடுவர்களின் அருகில் சென்று தோளில் தட்டிக்கொடுத்து கேட்டு வாங்கி சாப்பிடுங்கள் என்று கூறும் விஜயகாந்த்தின் பாங்கு, பலருக்கு கண்ணீரை வரவழைத்துவிடும். அதேபோல் நாடக நடிகர் என்ற பாகுபாடின்றி அவர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து பேசி வேண்டிய உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, திருவிழாக்கள் தவிர வேலையின்றி தவிக்கும் மேடை கலைஞர்களின் வாழ்வாதாரம் காக்க எண்ணற்ற உதவி என தனது உதவியாளர்கள் மூலம் அவர்களின் பெயர், விபரங்களை கேட்டு அறிந்து கொண்டு உதவிகளை தாராளமாக செய்து கொடுத்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் நாட்களில் தன்னிடம் உதவிகள் கேட்டு வருவோருக்கு வேட்டி, பரிசுப்பொருள் கொடுத்து உபசரித்து அனுப்புவதை கடைசி மூச்சு உள்ளவரை கடைபிடித்தார்.
அதேபோல் மதுரையில் இருந்து சென்னைக்கு யார் வந்தாலும், அவர்களை முதலில் சாப்பிட வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து பத்திரமாக சென்று வாருங்கள் என்று வழியனுப்பி வைத்த விஜயகாந்த்தை இன்று தமிழகமே வழியனுப்பி வைத்துள்ளது.






