என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மேட்டூர் அணையில் இருந்து 2 வாரங்கள் மட்டுமே தண்ணீர் திறக்க வாய்ப்பு: காவிரி டெல்டா விவசாயிகள் கவலை
- காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவிட்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
- கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்கினால் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும்.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை போதுமான அளவு பெய்யாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் சரிந்து வருகிறது.
அணைக்கு நீர்வரத்து நேற்று 3 ஆயிரத்து 216 கன அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் சிறிது அளவு அதிகரித்து 4,107 கன அடியாக வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் ஒரு நாளைக்கு ½ அடி வீதம் சரிந்து வருகிறது.
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 56.85 அடியாக உள்ளது.
இனி வரும் நாட்களில் நீர்வரத்து இதே அளவில் நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.
நீர்வரத்து சரிந்த நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது.
மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், அரியலூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
பாசன வசதிக்கு மட்டுமின்றி 155 குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாக இருந்து 22 மாவட்ட மக்களின் தாகத்தையும் மேட்டூர் அணை தீர்த்து வருகிறது.
ஆண்டுதோறும் பாசன விதிகளின்படி ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு குறுவை சாகுபடி, தாளடி பயிர்களுக்கு 330 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும்.
கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 56 நாட்களில் 46 டி.எம்.சி தண்ணீர் பாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி நிறைவடைய வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை பாசனத்திற்கு சுமார் 79 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.
ஆனால் தற்போது மேட்டூர் அணை நீர்மட்டம் 56.85 அடியாக உள்ளது. நீர் இருப்பு 22.30 டி.எம்.சியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்களுக்கும் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும் 9.60 டி.எம்.சி தண்ணீர் இருப்பு வைக்க வேண்டும். மீதமுள்ள தண்ணீரை கொண்டு 2 வாரங்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியும். அதன் பிறகு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற கவலையும் டெல்டா விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.
வருகிற ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்கவிட்டால் தமிழகத்தில் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி டெல்டா விவசாயிகள் மட்டுமின்றி மேட்டூர் அணை கிழக்கு, மேற்கு கால்வாய் பாசன விவசாயத்திற்கும் தண்ணீர் திறக்கப்படாததால் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் தண்ணீர் இன்றி பயிர் சாகுபடி செய்யப்படாமல் காய்ந்து வருகிறது.
கர்நாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்கினால் குறுவை பயிர்களை காப்பாற்ற முடியும். அல்லது பருவமழை கை கொடுத்தால் மட்டுமே குறுவை சாகுபடியை நிறைவு செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்