search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை வீரமங்கை வேலுநாச்சியாராக பார்க்கிறோம்- திண்டுக்கல் சீனிவாசன்
    X

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை வீரமங்கை வேலுநாச்சியாராக பார்க்கிறோம்- திண்டுக்கல் சீனிவாசன்

    • 1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார்.
    • எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டு நுழைவாயிலில் 51 அடி உயர கொடிமரம் நடப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வரும் அனைத்து தொண்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உணவு, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மாநாட்டிற்கு 25 லட்சத்திற்கும் அதிகமாக தொண்டர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்தியாவிலேயே வேறு ஒரு கட்சியும் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்தியது இல்லை என கூறும் அளவிற்கு வெற்றி மாநாடாக அமையும். கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பணியும் பார்த்து, பார்த்து செய்யப்படுகிறது. இந்த மாநாட்டிற்கு எப்படியாவது இடையூறு அல்லது தடை செய்ய தி.மு.க முயற்சி மேற்கொண்டு வருகிறது. அது ஒருபோதும் பலிக்காது.

    1972-ல் அ.தி.மு.கவை உருவாக்கியபோது எம்.ஜி.ஆர் எத்தனை வேகத்தில் செயல்பட்டாரோ அதைவிட 4 மடங்கு வேகத்தில் எடப்பாடி பழனிசாமி செயலாற்றி வருகிறார். அ.தி.மு.க.வில் 2 கோடியே 25 லட்சம் தொண்டர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது.

    பாராளுமன்றத்தில் மத்திய அரசின் மீது எதிர்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த தீர்மானத்தின்போது பங்கேற்று பேசிய தி.மு.க எம்.பி. கனிமொழி தமிழகத்தில் சமூகநீதி காக்கப்பட்டு வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதாகவும், மணிப்பூரில் திரவுபதிக்கு நேர்ந்ததைபோல துகில் உரியப்பட்டதாக ஆவேசமாக பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ந்தேதி தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை குறிப்பிட்டு பேசினார்.

    அன்றைய எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவின் துகில் உரியப்பட்ட சம்பவத்தை நினைவுபடுத்தி இதுதான் தி.மு.கவின் சமூகநீதியா என கேள்வி எழுப்பினார். தி.மு.கவின் சமூகநீதி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை சிவகங்கையின் வீரமங்கை வேலுநாச்சியாராக நாங்கள் பார்க்கிறோம். அன்றைய சட்டசபை நிகழ்வின்போது உறுதிமொழி எடுத்து கொண்ட ஜெயலலிதா இனிமேல் இந்த சட்டசபைக்குள் முதலமைச்சராகத்தான் நுழைவேன் எனக்கூறி அதன்படியே 2 ஆண்டுகள் கழித்து தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சராக பதவிஏற்றார். வரலாறு இவ்வாறு உள்ள நிலையில் சமூகநீதிக்காக தி.மு.க போராடுவதாக பேசுவதும், மணிப்பூர் பெண்களை திரவுபதியாக சித்தரித்து கனிமொழி பேசியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

    எப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது அ.தி.மு.க ஆட்சியில் மட்டுமே. இதனை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×