search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை அரசு டாக்டர் நூதன முறையில் தற்கொலை
    X

    சென்னை அரசு டாக்டர் நூதன முறையில் தற்கொலை

    • சந்தேகம் அடைந்த தீபா தன்னுடைய தோழியான ஸ்ரீவித்யா என்பவருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறினார்.
    • கார்த்தியின் அருகில் அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையை சேர்ந்தவர் கார்த்தி (வயது 42). இவர் அதே பகுதியில் உள்ள அவருடைய தாய்மாமனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இருதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

    இவருடைய தந்தை உலகநாதன். டாக்டரான இவர் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கார்த்தியின் தாய் கஸ்தூரி உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தியின் தங்கை தீபா திருமணம் முடிந்து அமெரிக்காவில் டாக்டராக பணியாற்றி அங்கேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    கார்த்தி கொரோனா பேரிடர் காலத்தில் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வேலை பார்த்தார். அப்போது, அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உதவி பேராசிரியராக ராஜீவ் காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் பணியில் சேர்ந்தார். பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையால் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வந்தார்.

    கார்த்தி தனது தங்கை தீபாவிடம் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவார். கடந்த 19-ந்தேதி தீபா, கார்த்திக்கை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து 2 நாட்களாக தன்னுடைய அண்ணன் கார்த்திக்கை அழைத்துள்ளார். ஆனால், அவரால் தொடர்புகொள்ள முடியவில்லை.

    இதனால், சந்தேகம் அடைந்த தீபா தனது தந்தை உலகநாதனிடம் தெரிவித்தார். அதன்பின்னர், உலகநாதன் கார்த்தியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோதும் அவர் அழைப்பை எடுக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தீபா தன்னுடைய தோழியான ஸ்ரீவித்யா என்பவருக்கு தகவல் தெரிவித்து, வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறினார். இதையடுத்து ஸ்ரீவித்யா, கார்த்தியின் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு திறந்து கிடந்ததை கண்டார். உள்ளே சென்றபோது அதிகமாக துர்நாற்றம் வீசியது.

    இதனால், சந்தேகம் அடைந்து வீட்டின் அறைக்குள் சென்று பார்த்த போது, கார்த்தி நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே கைகளில் ரத்தம் வெளியேறியவாறு பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அப்போது, கார்த்தியின் உடல் அழுகிய நிலையில் இருந்தது.

    இதுகுறித்து, தேனாம்பேட்டை போலீசாருக்கு அவர் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் போலீஸ் உதவி கமிஷனர் பிரகாஷ்ராஜ், இன்ஸ்பெக்டர் ஆனந்த் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    2 கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றும் ஊசியை கொண்டு உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி நூதனமுறையில் கார்த்தி இறந்திருப்பதாக போலீசார் கூறினர்.

    மேலும், கார்த்தியின் அருகில் அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று இருந்தது.

    அதில், 'எனது வாழ்க்கை அழகாக முடிவுக்கு வந்தது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதியிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்தியின் தாய்மாமன் மற்றும் அவர் வேலை செய்து வந்த இடங்களில் விசாரித்து வருகின்றனர்.

    டாக்டர் ஒருவர் நூதன முறையில் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×