search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் ஆஸ்பத்திரிகளில் வெளி நோயாளிகள் பிரிவு மூடல்
    X

    தனியார் ஆஸ்பத்திரிகளில் வெளி நோயாளிகள் பிரிவு மூடல்

    • அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
    • நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    சேலம்:

    மேற்கு வங்காள தலைநகர் கோல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர். அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியில் இருந்த 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய கேட்டு நாடு முழுவதும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் அகில இந்திய மருத்துவ சங்கம் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. அதன் படி நாடு முழுவதும் டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் 200-க்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகளில் இன்று காலை 6 மணி முதல் வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டது.

    அவசர சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பெரும்பாலான ஆஸ்பத்திரிகள் வெளி நோயாளிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வெளி நோயாளிகள் பிரிவு மூடப்பட்டதால் காய்ச்சல் தலைவலி, வயிற்று வலி உள்பட சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர். இதனால் அரசு ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளி நோயாளிகள் பிரிவில் அதிக நேரம் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வெகு நேரம் நோயாளிகள் காத்து நின்று சிகிச்சை பெற்று சென்றனர்.

    இதேபோல் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கொல்கத்தா மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சம்பவத்தில் தொடர்புடையவர்களை தூக்கிலிட வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.தொடர்ந்து மருத்துவமனை யில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை மட்டும் நடைபெறுகிறது.

    Next Story
    ×