search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு ஊழியருக்கான பலன்களை வழங்கவில்லை என அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட்
    X

    அரசு ஊழியருக்கான பலன்களை வழங்கவில்லை என அவமதிப்பு வழக்கு: பள்ளிக்கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக வேண்டும்- மதுரை ஐகோர்ட்

    • தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.
    • கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கில் கூறி இருந்ததாவது:-

    நெல்லை மாவட்டம் பழையபேட்டை கிராமத்தில் உள்ள ஊழியஸ்தானம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் 1966 ஆம் ஆண்டு முதல் அலுவலக உதவியாளராக 40 ஆண்டுகள் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன்.

    தமிழக அரசாணை அடிப்படையில் எனக்கான முழு ஓய்வூதிய பணப்பலன்களை முறைப்படுத்தி வழங்க உத்தரவிட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், எனது மனுவினை பரிசீலனை செய்து பணப் பலன்களை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்நிலையில் எனக்கு பணப்பலன்கள் வழங்குவது தொடர்பாக ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் தற்போது வரை நிறைவேற்றவில்லை. எனவே நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாத கல்வித்துறை அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கோர்ட்டு உத்தரவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஏன் நிறைவேற்றவில்லை? என கேள்வி எழுப்பினார். பின்னர், இது குறித்து தமிழக பள்ளிக்கல் வித்துறை செயலாளர், ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி கல்வி இயக்குனர் ஆகியோர் வருகிற 19-ந்தேதி இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    Next Story
    ×