search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தொடர் மழை: வாழப்பாடி பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
    X

    ஏற்காட்டில் மழையில் நனைந்தபடி படகு சவாரி செய்த சுற்றுலா பயணிகள்.

    தொடர் மழை: வாழப்பாடி பகுதிகளில் தடுப்பணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

    • ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.
    • கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக கரியகோவில், எடப்பாடி, மேட்டூர், ஏத்தாப்பூர், கெங்கவல்லி, வாழப்பாடி, ஏற்காடு உள்பட பல பகுதிகளில் கன மழை கொட்டியது.

    மேட்டூர் பகுதியில் நேற்று பிற்பகல் கன மழை கொட்டியது. மழையால் அந்த பகுதியில் தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையின் போது பண்ணவாடி- பரிசல் துறை இடையே மீன் பிடித்து கொண்டிருந்த செட்டிப்பட்டியை சேர்ந்த குப்புசாமி மனைவி சுந்தரி (37) என்பவர் உயிரிழந்தார்.

    ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ராமநாயக்கன்பாளையம், கல்பகனூர், தென்னங்குடி பாளையம் உள்பட பல பகுதிகளில்நேற்று பெய்த கன மழையால் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது. வாழப்பாடி பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது.

    இதனால் கோதுமலை வனப்பகுதிகளில் உள்ள சிறு நீரோடைகளில் மழை நீர் வழிந்தோடி கிராம வனக்குழு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 10 தடுப்பணைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்தது .

    ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி கோடை விழா தொடங்க உள்ள நிலையில் நேற்று காலை முதலே ஏற்காட்டில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். இதனால் அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகுகுழாம் உள்பட பல பகுதகிளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

    ஏற்காட்டில் நேற்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்ப ட்டது. மதியம் 1 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையாக கொட்டியது. தொடர்ந்து இரவு 7 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனை பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் பெய்து வரும் தொடர் மழையால் மலைப்பாதை ஓரத்தில் மழை பெய்யும் போது திடீர் அருவிகள் உருவாகி தண்ணீர் கொட்டியது . இதில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குளித்து மகிழ்ந்தனர். ஏற்காட்டில பெய்து வரும் தொடர் மழையால் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக கரியகோவிலில் 69 மி.மீ. மழை பெய்துள்ளது. சேலம் 0.1, ஏற்காடு 28.6, வாழப்பாடி 31.6, ஆனைமடுவு 10, ஆத்தூர் 6, கெங்கவல்லி 20, தம்மம்பட்டி 8, ஏத்தாப்பூர் 22.6, வீரகனூர் 6, நத்தக்கரை 10, சங்ககிரி 14.4, எடப்பாடி 33, மேட்டூர் 16.2, ஓமலூர் 15.6, டேனீஸ்பேட்டை 2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 293.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×