search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சீதாராம் யெச்சூரி மறைவு- ஈபிஎஸ், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
    X

    சீதாராம் யெச்சூரி மறைவு- ஈபிஎஸ், ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

    • உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.
    • சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார்.

    இந்நிலையில், சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன்.

    மாணவர் பருவம் முதலே கம்யூனிச, மார்க்சிஸக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முதலாளித்துவ கொடுமைகளை எதிர்த்து தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டவர். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

    பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், " இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியுன், மிகுந்த வேதனையும் அடைந்தேன்.

    சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி இளம் வயதிலிருந்தே பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர். பதின் வயதிலேயே தெலுங்கானா போராட்டத்தில் தீவிரம் காட்டிய யெச்சூரி, நெருக்கடி நிலை காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தியாவின் மிகச் சிறந்த மாணவர் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சீதாராம் யெச்சூரி சமூகநீதியிலும் அக்கறை கொண்டவர்.

    மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான எனது போராட்டத்திற்கு சீதாராம் யெச்சூரி துணை நின்றது எனது மனதில் இப்போது நிழலாடுகிறது. 2006ஆம் ஆண்டு மே மாதம் தில்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கூட்டத்தில் ஓபிசி இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்குவது சாத்தியமில்லை என்று கூறப்பட்ட நிலையில், உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நான் குரல் கொடுத்தேன்.

    அதைத் தொடர்ந்து கூட்டம் ஒத்திவைகப்பட்ட நிலையில், கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களையும் சந்தித்து ஆதரவுத் திரட்டினேன். பின்னர் மாலையில் தொடங்கி இரவு வரை நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அவர்களும், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி அவர்களும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தனர். அதேபோல் மற்ற தலைவர்களும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. சமூகநீதிக்காக என்னுடன் தோள்நின்ற தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் இழப்பாகும்.

    யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட அனைத்து பொதுவுடைமை இயக்கத்தினருக்கும் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

    மஜக தலைவர் தமிமுன் அன்சாரி இரங்கல் கூறுகையில்,"சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார் என்ற செய்தி ஆழ்ந்த வேதனையை தருகிறது. பாசிச சக்திகள் அதிகார மிடுக்குடன் நாட்டை மிரட்டி வரும் காலகட்டத்தில்; அதை எதிர்த்து முன் களத் தலைவராக அவர் நின்றாடிய அரசியல் களம் அனலாக இருந்தது. கம்யூனிச இயக்கம் மேலும் வலுவாக நடைபோட வேண்டிய தருணத்தில், அவரது மறைவு ஒரு பேரிழப்பாகும்" என்றார்.

    Next Story
    ×