search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மர்ம விலங்கு கால் தடம் பதிந்துள்ளத்தால் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் பீதி
    X

    மர்ம விலங்கு கால் தடம் பதிந்துள்ளத்தால் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் பீதி

    • இரவில் வெளியே வரவேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை.
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    மத்தூர்:

    போச்சம்பள்ளி அருகே அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் மர்ம விலங்கு கால்தடம் விவசாய நிலத்தில் பதிந்துள்ளதால் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த பேருஅள்ளி கிராமத்தில் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 5 நாட்களாக இந்த பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கு ஒன்று நடமாட்டம் இருப்பதாக அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    இந்த தகவல் காட்டு தீ போல இப்பகுதிகளில் பரவ துவங்கியது. மேலும் இந்த பகுதியில் உள்ள ஜகன், மற்றும் சின்னசாமி ஆகியோரின் தென்னந்தோப்புகளில் மர்ம விலங்கின் கால்தடம் பதிந்து இருப்பதை பார்த்து அவர்கள் கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் வனவர் பிரவின்ராஜ் தலைமையிலன வனகாப்பாளர் சுகுமார், உள்ளிட்ட குழுவினர். மற்றும் போச்சம்பள்ளி வட்டாட்சியர் மோகன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் தாமோதிரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மர்ம விலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது சிறுத்தையின் கால்தடம் என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து வனத்துறையினர் சார்பில் மருதேரி ஊராட்சியில் பேருஅள்ளி கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு சிறுத்தையை பார்த்தால், வனத்துறைக்கோ அல்லது ஊராட்சி மன்ற தலைவருக்கோ தகவல் கொடுக்க அறிவுறுத்தினர்,

    மேலும் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும், சின்னசாமி என்பவர் தென்னந் தோப்பில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சி.சி.டி.வி. கேமராவை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் போச்சம்பள்ளி பகுதியில் கிராம மக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சத்தில் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    Next Story
    ×