search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆதாரங்களுடன் 15 பக்க பதில் தயாரிப்பு- சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை தாக்கல்
    X

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆதாரங்களுடன் 15 பக்க பதில் தயாரிப்பு- சுப்ரீம் கோர்ட்டில் திங்கட்கிழமை தாக்கல்

    • பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
    • யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    சென்னை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

    கடந்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அன்று காலையில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ராயப்பேட்டை தலைமை கழகத்துக்கு ஓ.பி.எஸ். சென்றபோது அங்கு அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறின.

    இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தான் முதலில் வழக்கு தொடரப்பட்டது.

    இதில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பு ஓ.பி.எஸ்.சுக்கு சாதமாகவும் 2 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவும் அமைந்திருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.எஸ். சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு விசாரணையே தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.

    இந்த வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 4-ந்தேதி முதல் தீவிரப்படுத்தப்பட்டது. இரு தரப்பை சேர்ந்த வக்கீல்களும் தங்கள் தரப்பில் இருந்து பரபரப்பான வாதங்களை எடுத்து வைத்தனர். தொடர்ந்து 3 நாட்கள் நடந்த விசாரணைக்கு பின்னர் வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

    கடந்த 2 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ்ராய் ஆகியோர் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் தங்கள் தரப்பு வாதங்களை வருகிற 16-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளனர்.

    இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த வக்கீல்கள் இதுவரை கோர்ட்டில் எடுத்து வைத்த வாதங்களை எழுத்து வடிவில் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    எடப்பாடி பழனிசாமி தரப்பில் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகி வாதாடினார். பொதுக்குழு மற்றும் அவைத்தலைவர் தமிழ்மகன்உசேன் தரப்பில் மூத்த வக்கீல் முகுத் ரோகத்கியும், செயற்குழு தரப்பில் மூத்த வக்கீல் அதுல்சித்லே மற்றும் வக்கீல்கள் பாலாஜி, சீனிவாசன், கவுதம்குமார் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர். இவர்கள் தரப்பில் சுமார் 15 பக்கங்களை கொண்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த அறிக்கையை வருகிற 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

    மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடும்போது, கட்சி விதிகளுக்கு உட்பட்டே ஜூலை 11-ந்தேதி பொதுக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்கிற மனுதாரரின் வாதம் ஏற்புடையதல்ல என தெரிவித்தார்.

    இந்த கூட்டம் நடத்தப்படுவதை அவர்கள் (ஓ.பி.எஸ். தரப்பினர்) அறிந்திருந்தனர். இதனை ஜூலை 4-ந்தேதி தாக்கல் செய்த சிவில் வழக்கிலும் தெரிவித்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்துக்கு 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று கட்சி விதிகளில் கூறப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

    மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதிடும்போது, பதவியில் இருந்து நீக்கி விட்டால் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக பொதுச்செயலாளர் ஆகி விடலாம் என்று நினைத்ததாக வாதிடுவது சரியல்ல. அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தி ஆவணங்களை எடுத்துச் சென்றபிறகே ஓ.பி.எஸ்.சை நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுபோன்ற முக்கிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட உள்ள அறிக்கையில் இடம்பெற உள்ளது.

    ஓ.பி.எஸ். தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கிருஷ்ணகுமார், வைரமுத்து சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித்குமார் ஆகியோர் வாதிடும்போது எந்தவித அடிப்படை காரணமும் இல்லாமல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு உள்ளன என்று வாதிட்டார்.

    2021-ம் ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட கட்சி விதிகள் திருத்தம் அ.தி.மு.க.வினரால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் அதற்கு முரண்பாடான வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டிருப்பதாகவும் இரண்டு நீதிபதிகள் அமர்வு இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் வாதிட்டனர்.

    இதற்கு முன்னரும், சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வாதங்களை ஓ.பி.எஸ். தரப்பு வக்கீல்கள் எடுத்து வைத்துள்ளனர். அவை அனைத்தையும் சேர்த்து ஓ.பி.எஸ். தரப்பிலும் எழுத்துப்பூர்வ அறிக்கை 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

    அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் வாதங்கள் மற்றும் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதை யடுத்து இந்த வழக்கின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வழங்கப்பட்ட ஐகோர்ட்டு இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பு செல்லுமா? செல்லாதா? என்பதை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவிக்க உள்ளனர்.

    பொங்கல் பண்டிகைக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இதில் யாருக்கு இறுதி வெற்றி கிடைக்கப்போகிறது? என்பது அ.தி.மு.க. வட்டாரத்திலும் தமிழக அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

    Next Story
    ×