search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இன்றி தவிக்கும் வயதான மலைவாழ் தம்பதி
    X

    40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இன்றி தவிக்கும் வயதான மலைவாழ் தம்பதி

    • ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
    • மாரிக்கும் அவரது மனைவிக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டுக்கோணம்பட்டி பகுதியை சார்ந்தவர் மாரி (வயது 67) இவரது மனைவி வெள்ளையம்மாள் (62) இந்த வயதான தம்பதியினர் மலைவாழ் இனத்தை சார்ந்தவர்கள் எழுத படிக்க தெரியாதவர்கள்.

    இந்த தம்பதியினருக்கு அந்த பகுதியில் சொந்தமாக சிறிய அளவில் விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வருகின்றனர். இவர்களது மகள் திருமணம் ஆகி சென்று விட்டார்.

    இந்த நிலையில் இந்த தம்பதியினர் கடந்த 40 ஆண்டுகளாக ரேஷன் அட்டை இல்லாததால் அரசு மூலமாக கிடைக்கும் ரேஷன் பொருட்கள், அரசின் நல திட்டங்கள் போன்றவற்றை பெற முடியாமல் அவதியுற்று மன வேதனையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த தம்பதியினர் கடந்த 15 ஆண்டுகளாக ரேஷன் அட்டை வாங்குவதற்காக தருமபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு பல முறை அலைந்தும் ரேஷன் அட்டை பெற முடியவில்லை. அதிகாரிகள் அலட்சியம் காட்டி அவர்களை அலைகழித்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    இவர்கள் ஆவாரம்காட்டூர் பகுதியில் வீடு கட்டி வாழ்ந்து வருவதற்கான வீட்டு வரி ரசீதும் ஊராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது. அதே போல மாரிக்கும் அவரது மனைவிக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    ஆதார் அட்டை, வீட்டு வரி ரசீது போன்றவை இருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த வயதான தம்பதியினருக்கு இன்னமும் ரேஷன் அட்டை கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இந்த நவீன காலத்தில் இது போன்ற புறக்கணிப்புகள் தொடர்வது நல்லதல்ல.

    இது குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி அவர்களுக்கு ரேஷன் அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×