என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
3 பேரை பலி வாங்கிய பட்டாசு ஆலை விபத்து: அளவுக்கு அதிகமான வெடிமருந்து கலவையால் நேர்ந்த விபரீதம்
- சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
- 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சர்கார் கொல்லப்பட்டி பூதநாச்சி அம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.
கந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 41), மஜ்ரா கொல்லப்பட்டியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வந்ததால் பட்டாசு ஆலையை தற்போது கந்தசாமியின் மகன்களான வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.
பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆர்டர் அதிகமாக இருந்ததால் பட்டாசுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.
அப்போது ஆலையில் பட்டாசுக்கு மருந்து கலவையை சதீஷ்குமார் தயார் செய்தபோது பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
பட்டாசு ஆலை வெடித்ததில் 9 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி படி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் சதீஷ்குமார் 41, நடேசன் 40, எம்.கொல்லப்பட்டி அருகே உள்ள சடையாண்டி ஊரைச் சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.
3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), எஸ்.கொல்லப் பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரும் 40 முதல் 60 சதவீதம் உடல் கருகிய நிலையில் உள்ளதால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரும், காயம் அடைந்த 6 பேரின் உறவினர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை பார்த்து கதறி அழுதனர்.
இந்த விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் கை 500 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிடந்தது. அதேபோல பானுமதி என்ற பெண்ணின் தலையும் துண்டானது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.
இதற்கு இடையே சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.
அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்த பிருந்தா (28) கூறுகையில், எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் பட்டாசுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. என்ன ஆனது? எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. என் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு கண் கலங்கினார்.
பட்டாசு தயாரிப்பதற்கு 10 சதவீதம் கார்பனும், 75 சதவீதம் பொட்டாசியம் நைட்ரைட்டும், 15 சதவீதம் சல்பரும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் கலக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் அதிக அளவில் கலந்தால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கலவை செய்யும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனை சதீஷ்குமார் கலந்த போது தான் வெடி விபத்து நடந்துள்ளதால் அவர் கைதுண்டானதும், அவர் அருகில் நின்ற பெண்ணுக்கும் தலை துண்டாகிய கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்