search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் கவலை- பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட வலியுறுத்தல்
    X

    வயல்களில் வெடிப்பு ஏற்பட்டு கருகும் நெற்பயிர்களால் விவசாயிகள் கவலை- பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட வலியுறுத்தல்

    • சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
    • ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தான் பிரதான பயிராக உள்ளது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

    இந்த ஆண்டு குறுவை சாகுபடி 5 லட்சம் ஏக்கரில் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜுன் 12-ந் தேதி திறந்து விடப்பட்டது.

    இருந்தாலும் கடைமடை பகுதி வரை தண்ணீர் சரியாக சென்று சேரவில்லை என விவசாயிகள் கூறி வருகின்றனர். இதனால் கடைமடை பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிகள், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    கல்லணையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தலைமடை பகுதியான தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போதிய தண்ணீரின்றி நெற்பயிர்கள் காய்ந்து வருகின்றன. குறிப்பாக திருவையாறு அருகே உள்ள மேலதிருப்பூந்துருத்தி, கண்டியூர், நடுக்காவேரி மற்றும் சுற்றியுள்ள இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்களில் வெடிப்பு ஏற்பட்டு நடவு செய்து 30 நாட்களே ஆன நெற்பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனைப்பட்டனர்.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது போதிய தண்ணீரின்றி காய்ந்து வரும் குறுவை பயிர்களை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-

    பாசன வாய்க்காலில் போதிய தண்ணீரும் வரவில்லை. தலைமடை பகுதிக்கு தண்ணீர் இல்லை என்றால் இதை விட வேதனை வேறு என்னவாயிருக்கும். தண்ணீரின்றி கருகி வரும் பயிர்களை பார்க்க வேதனையாக உள்ளது. தற்போது ஆடி மாத காற்றும் பலமாக வீசி வருவதால் வயலில் உள்ள ஈரப்பதமும் காய்ந்து வருகிறது. இதனால் வயல்களில் ஆங்காங்கே பாலம் பாலமாக வெடிப்பு விட்டு வருகின்றன.

    எனவே கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீர் திறக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணையில் இருந்து முறை வைக்காமல் தண்ணீர் திறந்து பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்தும் இனிமேல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என்று தெரியவில்லை. எனவே எங்கள் பகுதியில் உரிய கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 92,214 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். குறுவை நெல்பயிர் நேரடி விதைப்பின் கீழ் சுமார் 28,569 ஏக்கரிலும், நெல் தீவிரப்டுத்தல் முறையின் கீழ் 46,720 ஏக்கரில் பயிடப்பட்டுள்ளது. சாதாரண நாற்று நடவு முறையில் குறுவை பயிர் சுமார் 14,680 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்ட நிலையில் கடைமடை மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் வருவதால் அதிலிருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நேரடி விதைப்பு செய்த நெற் பயிர்கள் முற்றிலுமாக கருகி வருகிறது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் அருகே உள்ள பழையவலம், செங்கமேடு, ஓடாச்சேரி, கேக்கரை, கள்ளிக்குடி, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 3000 ஏக்கர் நேரடி விதைப்பு செய்த நெற்பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது. மாவட்டத்தில் சுமார் 10,000 ஏக்கர் பரப்பில் தண்ணீர் இன்றி இளம் நெற்பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

    குறிப்பாக வெட்டாறு பாசனத்தில் இருந்து பிரியக்கூடிய பாசன வாய்க்காலில் இதுவரை ஒரு முறை மட்டுமே தண்ணீர் வந்ததாகவும் அந்த தண்ணீரும் விவசாய நிலங்களுக்கு பாய்ச்ச முடியாத நிலையில் குறைந்த அளவு தண்ணீராக வந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் வசதியான விவசாயிகள் மட்டும் என்ஜின் வைத்து தண்ணீரை தங்களது நெற் பயிர்களுக்கு பயன்படுத்தி கொண்டனர். மற்ற விவசாயிகளின் நெற் பயிர்கள் கருகும் நிலை உருவாகி வருகிறது. ஒரு ஏக்கருக்கு ரூபாய் 10000 வரை செலவு செய்துள்ளோம். இந்நிலையில் தற்போது பயிர்கள் கருகி வருகிறது. மூன்றாவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்ய முடியாத நிலையில் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வர் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35,000 இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் வருகிற 27-ந்தேதி தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை பார்வையிட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×