search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவள்ளூரில் லாட்ஜில் தீ விபத்து- அறையில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
    X

    திருவள்ளூரில் லாட்ஜில் தீ விபத்து- அறையில் சிக்கிய மாற்றுத்திறனாளியை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

    • திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது.
    • புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவில் அருகே உள்ள லாட்ஜூகளில் அறை எடுத்து தங்குவது வழக்கம்.

    இந்நிலையில் சென்னை வண்ணாரப் பேட்டையை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய வந்தனர். பின்னர் அவர்கள் சன்னதி தெருவில் உள்ள லாட்ஜில் தங்கி இருந்தனர். இன்று காலை திடீரென லாட்ஜில் இருந்த மின்வயரில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. இதனால் அறைகளுக்குள் புகை மூட்டம் பரவியது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அறைகளில் தங்கி இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர்.

    அப்போது வண்ணாரப் பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரைராஜ் என்பவர் வெளியே வர முடியாமல் அறையில் சிக்கிக் கொண்டார். புகை மூட்டம் அதிகம் ஏற்பட்டு தீப்பற்றியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    அவர்கள் புகை மூட்டத்தில் லாட்ஜ் அறையில் சிக்கி இருந்த மாற்றுத்திறனாளி துரைராஜை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×