search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோகுல்ராஜ் கொலை வழக்கு- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
    X

    ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

    கோகுல்ராஜ் கொலை வழக்கு- திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

    • கோகுல்ராஜின் தாயார் சித்ரா வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்தார்.
    • சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் என்ஜினீயர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு, நாமக்கல் மாவட்டம், தொட்டிபாளையம் பகுதியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். கோகுல்ராஜ், சுவாதி என்ற பெண்ணை காதலித்ததும், இந்த விவகாரத்தில் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.கோகுல்ராஜ் கொலை வழக்கு, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.

    இந்த வழக்கில், கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர் ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட நீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் 8-ம் தேதி தீர்ப்பளித்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில், மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.

    அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் உள்ளிட்ட 5 பேர் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் சித்ரா, மற்றும் இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியமாக மாறினார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப்பதிவு செய்தது.

    கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பொய் சாட்சியம் கூறியும், பிறழ் சாட்சியமாக மாறியும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்திய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து அதற்கான மெமோவை அவரது கணவரிடம் வழங்க உத்தரவிட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த நிதீபதிகள் இதை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றினர்.

    இதையடுத்து, இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என். ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் முன்பு கடந்த 6-ந் தேதி விசாரணைக்கு வந்தது. சுவாதிக்கு பதிலாக அவரது கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கோகுல்ராஜ் கடைசியாக இருந்ததாக சி.சி.டி.வி.யில் பதிவான திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதன்படி இன்று காலை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆனந்த வெங்கடேஷ், ரமேஷ் ஆகியோர் சென்னையில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வந்தனர். அங்கிருந்து புறப்பட்டு நேராக திருச்கோடு வந்தனர்.

    பின்னர் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில் ராஜகோபுரம், படிக்கட்டு, மேற்கு புற வாசல் மற்றும் கோவிலுக்குள் அனைத்து பகுதிகளையும், வீடியோ காட்சிகள் பதிவான இடங்களையும் பார்வையிட்டனர்.

    கோகுல்ராஜ் தொடர்பாக கோவிலில் பதிவான வீடியோ காட்சிகளில் கோர்ட்டில் சமர்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் வைத்து அந்த இடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் சுவாதியும், கோகுல்ராஜிம் கோவில் கொடி மரம் வழியாக வரும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளையும் பார்வையிட்டனர்.

    யுவராஜ் மற்றும் அவரது ஆட்கள் கோவிலுக்குள் இருந்து 2 பேரையும் அழைத்து கொண்டு வெளியேறுவதையும் அந்த இடத்தையும் பார்வையிட்டனர். இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருச்செங்கோடு டி.எஸ்.பி. மகாலெட்சுமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×