search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சூரிய ஒளி மின்வேலியால் வனவிலங்குகள் பாதிக்கப்படுமா?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    சூரிய ஒளி மின்வேலியால் வனவிலங்குகள் பாதிக்கப்படுமா?- அதிகாரிகள் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    • மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.
    • சூரியஒளி மின் சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதன் மூலமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும்.

    மதுரை:

    நெல்லை மாவட்டம் கருத்தபிள்ளையூரைச் சேர்ந்த வின்சென்ட், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் உற்பத்தியாளர் குழுத்தலைவராக உள்ளேன். கடையம், குற்றாலம் மற்றும் கடையநல்லூர் ஆகிய பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளன. இந்த மலை, செழிப்பான பல்லுயிர் மற்றும் பன்முக சொர்க்கமாக கருதப்படுகிறது. அங்கு பல்வேறு வகையான தாவரங்களும், விலங்கினங்களும் உள்ளன.

    இந்த மலை அடிவாரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் விவசாயத்தை நம்பியே உள்ளனர். விவசாயத்துக்கு நீர்ப்பாசனமாக கடனா அணை, ராமநதி அணை, அனுமன் ஆறு, கருப்பா நதி ஆகியவற்றில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது.

    வனப்பகுதியும், நிலப்பகுதியும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால், அடிக்கடி மனிதர்கள், வனவிலங்கு மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. சமீபத்தில் கரடி தாக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர். அதேபோல தொடர்ந்து விவசாய பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்தி வருகின்றன. குறிப்பாக காட்டுப்பன்றிகளின் அட்டகாசம் அளவில்லாதது.

    எனவே வனவிலங்குகளால் பாதிக்கப்படும் கிராமவாசிகளுக்கு அதிநவீன மருத்துவ உதவி, உரிய நிவாரணம் மற்றும் வனவிலங்குகளால் அழிக்கப்பட்ட மரங்கள், விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட வேண்டும். கிராமப்பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் வன எல்லைப்பகுதியில் சூரியஒளியில் இயங்கக்கூடிய மின்வேலிகளை அமைக்க வேண்டும். இதன்மூலம் வனவிலங்குகளால் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தேன். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே கடையம், குற்றாலம், கடையநல்லூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி வன எல்லைப்பகுதிகளில் சூரியஒளியில் இயங்கும் மின்வேலிகளை அமைக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சமீபத்தில் கூட மின்வேலிகளில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன என்றனர்.

    அதற்கு மனுதாரர் வக்கீல் ஆனந்த் ராஜேஷ் ஆஜராகி, சூரியஒளி மின் சக்தியால் இயங்கக்கூடிய மின்வேலிகள் அமைப்பதன் மூலமாக வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வருவதை தடுக்க முடியும். சூரியஒளி மின்வேலியினால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாது என தெரிவித்தார்.

    விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து தமிழக அரசின் வனத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் மாதம் 10-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    Next Story
    ×