search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரெயிலில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் அதிகரிப்பு
    X

    ரெயிலில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்போர் அதிகரிப்பு

    • வடமாநிலத்தவர்கள் எடுப்பது முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கான டிக்கெட், ஆனால் பயணிப்பது முன்பதிவு பெட்டிகளில் மட்டுமே.
    • இதனால் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் இருக்கைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

    சென்னை:

    இந்தியாவில் ரெயில் போக்குவரத்து என்பது மிகவும் பிரபலமான போக்குவரத்து வசதியாக உள்ளது. விமானம், பஸ் போன்றவற்றை விட ரெயில் பயணத்தை பலர் விரும்புகின்றனர். குறிப்பாக, ஏழை-எளிய மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் ரெயில் பயணத்தை அதிகமான அளவில் பயன்படுத்துகின்றனர். ரெயில் பயணத்தில் செலவு குறைவு என்பதோடு வேகமாகவும், பாதுகாப்பாகவும் பயணிக்கலாம். எனவே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ரெயிலில் பயணம் செய்வதை மிகவும் விரும்புகின்றனர்.

    அந்தவகையில், சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்னை சென்டிரலில் இருந்து அதிக அளவு ரெயில்கள் வடமாநிலங்களுக்கு இயக்கப்படுகிறது. அவற்றில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிப்பது தற்போதைய மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.

    இதுபோன்ற சம்பவங்கள் வடமாநிலங்களில் நடைபெறுவது இயல்பாக உள்ளது. ஆனால் தற்போது இந்த சம்பவம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக சென்னையிலிருந்து மேற்கு வங்காளம், பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் அடாவடித்தனமாக ஏறி இருக்கையை அபகரித்து பயணிக்கின்றனர்.

    வடமாநிலத்தவர்கள் எடுப்பது முன்பதிவு செய்யாத பெட்டிகளுக்கான டிக்கெட், ஆனால் பயணிப்பது முன்பதிவு பெட்டிகளில் மட்டுமே. இந்த சம்பவங்கள் தற்போது தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அரங்கேறி வருவது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

    அந்தவகையில், நேற்று முன்தினம் இரவு சென்னை சென்டிரலில் இருந்து ஹவுரா சென்ற விரைவு ரெயில் பயணிகளை ஏற்றுவதற்காக சென்டிரல் ரெயில் நிலையம் வந்தது. ரெயிலில் ஏறுவதற்காக முன்பதிவு (எஸ்.3 பெட்டியில்) செய்த பயணிகள் காத்திருந்தனர். ஆனால் ரெயில் நிலையத்தில் ரெயில் வந்து நிற்பதற்கு முன்பாகவே வடமாநிலத்தவர்கள், முன்பதிவு பெட்டியில் முண்டியடித்து ஏறினர்.

    இதனால் முன்பதிவு செய்த பயணிகள் தங்கள் இருக்கைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். குறிப்பாக ரெயிலில் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் 18 பேர் ரெயிலில் ஏறமுடியாமல் தவித்தனர். இறுதி வரையில் போராடியும் ரெயிலில் ஏற முடியாமல் வேறு வழியின்றி வீடு திரும்பிய அவலம் அரங்கேறியது.

    இதுகுறித்து பயணி ஒருவர் கூறியபோது, 'முன்பதிவு செய்த பின்னரும் ரெயிலில் பயணிக்க முடியவில்லை என்றால் எதற்காக முன்பதிவு செய்ய வேண்டும். இதுபோன்ற செயல்கள் தமிழ்நாட்டில் இருந்து வடமாநிலம் செல்லும் ரெயில்களில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. ஆனால் தெற்கு ரெயில்வே சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுபோன்று முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாமல் வடமாநிலத்தவர்கள் செல்வதை அனுமதித்தால், நாளடைவில் வடமாநிலங்களில் உள்ள ரெயில் பயணம்போல தமிழ்நாடு ரெயில் பயணம் மாறிவிடும். எனவே, இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தெற்கு ரெயில்வே சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

    இதுபோன்ற சம்பவங்களால் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது. தொடர்ந்து அரங்கேறிவரும் இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு ரெயில்வே சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் காப்பது ஏன்? பயணிகளின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கை எடுப்பதாக ரெயில்வே சார்பில் கூறப்படுகிறது. ஆனால் முன்பதிவு செய்தும், ரெயிலில் பயணம் செய்ய முடியாமல் உள்ள பயணிகளின் நலனுக்கு தெற்கு ரெயில்வே என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    Next Story
    ×